பக்கம் எண் :

76

பத்துப்பாட்டு

287. தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் - தெய்வத்தன்மையமைந்த வலிவிளங்கும் வடிவினையும்,

288. வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி - வானைத்தீண்டும் வளர்ச்சியினையுமுடைய தான் அவையை வந்தணுகி,

289. அணங்குசால் உயர்நிலை தழீஇ - வருத்தமமைந்த தெய்வத்தன்மையை உள்ளடக்கிக் கொண்டு,

289 - 90. [பண்டைத்தன், மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி :] மணம் கமழ் தெய்வத்து பண்டை தன் இளநலம் காட்டி - மணம் நாறுகின்ற தெய்வத்தன்மையையுடைய முன்புண்டாகிய தன் இளைய வடிவைக் காட்டி,

291. [ அஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென :] நின் வரவு அறிவல் அஞ்சல் ஒம்புமதி என - நீ வீடுபெற நினைத்துவந்த வரவையான் முன்னே யறிவேன்; அது நினக்கு எய்தலரிதென்று அஞ்சுதலைப் பரிகரியென்று,

292. அன்புடை நன்மொழி அளைஇ - நின்மேல் அன்புடையவாகிய நல்ல வார்த்தைகளைப் பலகாலும் அருளிச் செய்து,

292 - 4. [ விளிவின்று, இருணிற முந்நீர் வளைஇய வுலகத், தொருநீயாகித் தோன்ற :] இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒரு நீ ஆகி விளிவு இன்று தோன்ற - இருண்ட நிறத்தையுடைய கடல் சூழ்ந்த உலகத்திடத்தே நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியையாய்க் கேடின்றித் தோன்றும்படி,

294-5. விழுமிய பெறல் அரு பரிசில் நல்குமதி - சீரிய பிறராற் பெறுதற்கரிய வீடுபேற்றினைத் தருவன்;

1 "இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடுந், தகுநிலை யுடைய வென்மனார் புலவர்" (தொல். இடை சூ. 27) என்றதனானாதல், "அவ்வச்சொல்லிற்கு" (தொல். இடை, சூ. 47) என்னும் புறனடையதனானாதல் மதி படர்க்கைக்கண் வருதல் கொள்க.

இனி மதிபலவுடனெனக் கூட்டி, அறிவுகள் பலவுடனே பரிசில் நல்குமென்று கூறுவாருமுளர்.

295-6. [ பலவுடன், வேறுபஃறுகிலி னுடங்கி :] வேறு பல் துகிலின் பல உடன் நுடங்கி - வேறுபட்ட பலவாகிய துகிற்கொடிகளைப் போலத்தாம் பலவும் கூடவசைந்து,

296-7. அகில் சுமந்து ஆரம் முழு முதல் உருட்டி - அகிலை மேற்கொண்டு சந்தனமாகிய பெரிய மரத்தைத் தள்ளி.


1. இச்சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் இப்பகுதியை மேற்கோள் காட்டியதன்றி அங்கே பொருளும் இங்ஙனமே எழுதினர்.