பக்கம் எண் :

691

பாடினோர் வரலாறு

1.இடைக்கழிநாட்டு நல்லூர்நத்தத்தனார்: இவர் பத்துப்பாட்டுள், சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர். இவருடைய நாடாகிய இடைக்கழிநாடென்பது சென்னைக்குத் தென்மேற்கிலுள்ள ஒரு சிறு நாடு; இக்காலத்து இந்நாடு இப்பெயராலேயே வழங்கப் பெறுகின்றது. இஃது உப்பங்கழிகளுக்கு இடையே இருத்தலின், இப்பெயர் பெற்றது போலும்; இதிலுள்ள ஊர்கள் பலவற்றுள் நல்லூரென்று ஓரூர் இருக்கின்றது; அதுவே இந்நூலாசிரியருடைய ஊராக இருத்தல்வேண்டும். இவருடைய காலத்துப் புலவர் நல்லியக்கோடனைப்பாடிய புறத்திணை நன்னாகனாராவார். இவர் காலத்துப் பிரபுக்கள் இப்பாட்டுடைத் தலைவனாகிய நல்லியக்கோடனும், புறத்திணை நன்னாகனாராற் பாடப்பெற்ற ஓய்மானல்லியாதனும், கரும்பனூர் கிழானுமே. தத்தனாரென்பது இவரது இயற்பெயரென்றும் கல்விமேம்பாடுபற்றி நத்தத்தனாரென்ற பெயர் இவருக்குப் பிற்காலத்தில் வழங்கலாயிற்றென்றும் தோற்றுகின்றது; ‘ந' என்பது சிறப்புப் பொருளைத் தருவதோரிடைச் சொல்; நக்கீரர், நப்பாலத்தர், நப்பூதனார், நச்செள்ளையார் முதலிய பெயர்களாலும் இது விளங்கும். நத்தத்தனாரென ஒரு புலவர் பெயர் புறநானூற்றில் 218-ஆம் பாட்டின் ஆசிரியர் பெயரின் பாடபேதமாகக் காணப்படுகின்றது. அந்த நத்தத்தரென்பவரும் திருவள்ளுவமாலையிலுள்ள, "ஆயிரத்து முந்நூற்று முப்பது" என்னும் முதலையுடைய வெண்பாவையியற்றிய நத்தத்தனாரென்பவரும் நத்தத்தமென்னும் இலக்கண நூலை இயற்றிய நத்தத்ரென்பவரும் இவரும் ஒருவரோவேறோ தெரியவில்லை.

இவரால் இயற்றப்பெற்ற சிறுபாணாற்றுப்படையினால், இவர் ஐந்திணையையும் சிறப்பித்துப்பாடுதலில் வல்லவரென்பதும் பண்களைப் பற்றிய நுண்ணறிவுடையவரென்பதும் புலப்படுகின்றன. "திறவாக் கண்ணசாய்செவிக்குருளை" (130) என்பது முதலிய அடிகளில் வறுமை நிலையை நன்கு விளக்கிக் கூறியுள்ளார். தாம் தொண்டை நாட்டினரேயாயினும் மதுரைச்சங்கத்தே தமிழாராய்ந்து கண்கூடாகச் சங்கத்தின் நிலையை அறிந்த நல்லிசைப் புலவராதலின் அம்மதுரையை, "தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை" எனச் சிறப்பித்திருக்கின்றார்.

2. இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்: இவர் மலைபடுகடாமென்னும் பாட்டையியற்றியவர். இரணியமுட்டமென்பது மதுரையைச் சார்ந்த யானைமலை முதலிய இடங்களைத் தன்பாற் கொண்டதாகிய ஒரு சிறியநாடென்பர். இவர் பெருமையும் பிறவும் மலைபடுகடாத்தின் 145-ஆம் அடியின் விசேடவுரையால் விளங்கும். இவர் சாதியால் அந்தணர்; இதனை `உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப்பெருங்கௌசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணனாரென்பன அந்தணர்க்குரியன' (தொல். மரபு, சூ. 74, பேர்.)