பக்கம் எண் :

692
என்பதனாலறிக. இந்நூலன்றி நற்றிணையில் இரண்டு (44,139) செய்யுட்களும் இவர் செய்தனவாகத் தெரிகின்றன. கௌசிகனாரென்று ஒரு நல்லிசைப் புலவர் பெயர் பழைய நூல்களிற் காணப்படுகின்றது; அவரும் இவரும் ஒருவரோ வேறோ தெரியவில்லை.

இவர் பாடியவற்றுள், ஆகுளி, எல்லரி, குழல், குறும்பரந்தூம்பு, சிறுபறை, சீறியாழ், தட்டை, தண்ணுமை, துடி, தூம்பு, பதலை, பன்றிப்பறை, பாண்டில், பேரியாழ், முழவென்னும் இசைக்கருவிகளைப்பற்றிய செய்திகளும், குறிஞ்சி, படுமலை, மருதமென்னும் பண்களைப்பற்றிய செய்திகளும், யாழ்வருணனையும், காட்டுவழியிடையே செல்லுகையில் இசைக் கருவிகளுக்கு நேரும் இடையூறுகளும், அவற்றை நீக்கிக் கொள்ளும் உபாயங்களும் காணப்படுதலின், இவர் இசைக்கருவிகளைப் பற்றியும் பண்புகளைப்பற்றியும் நன்கறிந்தவரென்பது பெறப்படும். "திருமழை தலைஇய விருணிற விசும்பின், விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத், திண்வார் விசித்த முழவு" (மலைபடு.1-3), "மழையெதிர் படுகண் முழவுக ணிகுப்ப" (மலைபடு. 532)என முழவின் ஒலிக்கு மேகத்தின் முழக்கத்தை மலைபடு கடாத்தில் உவமை கூறியதை ஒட்டி "எழிலி ...... முழவின் மண்ணார் கண்ணி னிம்மெனவிமிரூஉ" (நற்.139) என மழை முழக்கத்திற்கு முழவின் ஒலியை இவர் உவமித்திருத்தல் அறியத்தக்கது.

3. கடியலூர் உருத்திரங்கண்ணனார்: இவர் பெரும்பாணாற்றுப் படையையும், 1பட்டினப்பாலையையும் இயற்றிய ஆசிரியர். இவருடைய ஊராகிய கடியலூரென்பது இன்னநாட்டிலுள்ளதென்று தெரியவில்லை. ஐயந்தீர்தற்பொருட்டுத் தந்தையின் பெயரைப் புதல்வனுடைய பெயர்க்கு விசேடணமாக்கி வழங்குதல் மரபாக இருத்தலாலும், உருத்திரங்கண்ணனாரென்னும் பெயர்த்தொகையை உருத்திரனாருடைய புதல்வராகிய கண்ணனாரென விரித்தற்கு இடமுண்டாதலாலும் 'உருத்திரனார்' என்பவர் இவருடைய தந்தையாராகக் கருதப்படுகிறார். உருத்திரனாரென்னும் பெயரொன்று குறுந்தொகையில் "புறவுப்புறத்தன்ன" என்னும் 274-ஆம் செய்யுளியற்றியவர் பெயராகக் காணப்படுகின்றது. "ஊரும் பெயரும்" (தொல். மரபு. பேர்.) என்னும் சூத்திரத்தின் விசேடவுரையால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார். பெரும்பாணாற்றுப்படையில் அந்தணர் மனையையும் அந்தணமகளிர் கற்பினையும் அவர்கள் விருந்து பேணும் முறையையும் விளங்கக் கூறியுள்ள பகுதியும், கேள்வியந்தண ரருங்கட னிறுத்த வேள்வித் தூணத்தைப் பற்றிக் கூறுவதும் இங்கே அறிதற்குரியன. "இருநிலங் கடந்த


1 வெறியார் தவைத் தொடைச் செயமாறன் வெகுண்டதொன்றும் அறியாத செம்பியன் காவிரிநாட்டி லரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப்பாலைக் கன்று நெறியால் விடுந்தூண் பதினாறுமே யங்கு நின்றனவே. (திருவெள்ளறைச் சாஸனப் பாடல்)