பக்கம் எண் :

721
"பச்சிலை பழம்போ தேனும் பறித்திட்டுப் பத்தி செய்வோர்க்
கெச்சமி லிருமைப் பேறு மளித்தரு ளிறைவா போற்றி
முச்சக முதலே போற்றி முலைச்சுவட் டணியாய் போற்றி
நச்சினார்க் கினியாய் போற்றி யெனத்துதி நவிலுங் காலை

(காஞ்சிப்புராணம்,சத்ததான. 11)

இவர் இப்பத்துப்பாட்டிற்கன்றித்தொல்காப்பியத்திற்கும் கலித்தொகைக்கும்சீவகசிந்தாமணிக்கும் குறுந்தொகையிற் பேராசியர்பொருளெழுதாதொழிந்த இருபது செய்யுட்களுக்கும் உரைசெய்தருளினர்; இன்னும் சில நூல்களுக்கு இவர் உரையியற்றினரென்பர்; அவைஇவையென்று புலப்படவில்லை.

இவர் பதஸாரம் எழுதுதல் மிகப்பாராட்டற்பாலது.

இவர் பழைய செய்யுட்களையேனும்அவற்றின் கருத்தையேனும் உரைநடையாக எழுதுவதுண்டு.

மேற்கோளாக எடுத்துக்காட்டும்நூலின் பெயரையாவது நூலாசிரியரின் பெயரையாவது எடுத்துக்கூறுதல் பெரும்பாலும் இவருக்குவழக்கமின்று.

வெளிப்படையாகக் கூறப்படாமலிருந்தும் சில சில குறிப்பைக் கொண்டு ஊகித்தறிந்து இன்ன காலத்தில் இன்னசெய்தி நிகழ்ந்தது, இன்ன காலத்தில் இன்ன செய்தி நிகழ்ந்ததென்று சீவக சிந்தாமணியில் அவ்வவ்விடத்துக் கதை நிகழ்ந்த காலத்தை விளக்கிக்கொண்டே போவர்; (21, 413, 493, 590, 851, 1564, 2029, 2033, 2106, 2706-ஆம் கவிகளின் உரைகளைப் பார்க்க)

"அறுவர்தந் நூலு மறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறான நீக்கி-மறுவரவின்
மாசா ரியனாய் மறுதலைச்சொன் மாற்றுதலே
ஆசா ரியன தமைவு

(ஏலாதி, 76)

என்றபடி நூலின் சமயத்தையும் நூலாசிரியருடைய கொள்கையையும் அவர் கருத்தையும் அறியவேண்டிய அளவு உழைத்தறிந்து அவற்றிற்கேற்பவே உரையெழுதுதல் இவருக்கு இயலபு; இவருடைய உரை விகற்பங்கள் இன்னும் பலவகை.

பொருநராற்றுப்படை 141, 143, 159-ஆம் அடிகளுக்கும் சிறுபாணாற்றுப்படை 9-11, 28-30, 140-43-ஆம் அடிகளுக்கும், பெரும்பாணாற்றுப்படை 183-ஆம் அடிக்கும், மதுரைக்காஞ்சி 468, 764-5-ஆம் அடிகளுக்கும் எழுதியுள்ள விசேட இலக்கணக்குறிப்பாலும், கலித்தொகை 39, 127-ஆம் கவிகளின் விசேடவுரையாலும், சீவகசிந்தாமணி 72, 892, 893, 1913, 2690-ஆம் செய்யுட்களின் விசேட வுரைகளாலும் தொல்காப்பியத்திற்கே முதலில் இவர் உரை இயற்றினாரென்று தெரிகின்றது.