149
இதன் பொருள்

1 - 2. [மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை, யணிமுலைத் துயல்வரூஉ மாரம் போல:] பணை தோள் மா நிலம் மடந்தை மணி மலை அணி முலை துயல்வரூஇம் ஆரம் போல-மூங்கிலாகிய தோளையுடைய பெருமையினையுடைய மண்மகளுடைய 1மணிகள் தங்கின 2மலையாகிய அழகினையுடைய முலையிற் கிடந்தசையும் முத்துவடம்போல,

3 - 4. [செல்புன லுழந்த சேய்வரற் கான்யாற்றுக், கொல்கரை நறும்பொழில்:] சேய் வரல் கரை கொல் கான்யாறு செல் புனல் உழந்த நறு பொழில்-3மலைத்தலையினின்றும் வருதலையுடைய கரையைக் குத்துகின்ற காட்டாற்றிடத்து ஓடுகின்ற புனலாலே வருந்தின நறிய பொழிலிடத்து,

இரண்டு மலையினின்றும் வீழ்ந்து இரண்டு ஆற்றிடைக்குறையைச் சூழ வந்து பின்னர்க் கூடுதலின், முத்துவடம் உவமையாயிற்று; இது மெய்யுவமம். பெருக்காற் கோடுகள் வருந்துதலின், உழந்தவென்றார். இதனாற்பயன்- 4ஆற்றிடைக்குறையில் நின்றமரம் இளவேனிற்காலத்து மிகவும் பூத்ததாயிற்று.

4 - 8. [குயில்குடைந் துதிர்த்த, புதுப்பூஞ் செம்மல் சூடிப் புடை நெறித்துக், கதுப்புவிரித் தன்ன காழக நுணங்கற, லயிலுருப் பனையவாகி யைதுநடந்து, வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப:]

காழ் அகம் நுணங்கு அறல் (6) குயில் குடைந்து உதிர்த்த (4) புது பூ செம்மல் சூடி புடை நெறித்து (5) கதுப்பு விரித்தன்ன (6) வேனில் நின்ற (9)-கருமையை இடத்தேயுடைய நுண்மையையுடைய அறல் குயில்கள் அலகாலுளர்ந்து உதிர்த்த புதிய பூக்களாகிய வாடலைச்சூடித் தம்மிடமெல்லாம் அறல்பட்டு மயிரை விரித்தாலொத்த தன்மையவாக இளவேனில் நின்றவென்க.

பொழிலிடத்து (4) அறலென்க.


1 "மாமலை பயந்த காமரு மணியும்", "மலைபயந்த மணியும்" (புறநா. 218 : 2, 377 : 16)

2 "சோதிமதி வந்துதவழ் சோலைமலை யோடிரண்டாய், மேதினியாள் கொங்கைநிகர் வேங்கடமே" (திருவேங்கட மாலை), "கொங்கையே பரங்குன்றமுங் கொடுங்குன்றும்" (திருவிளை. நகர. 2)

3 "மலைத்தலைய கடற்காவிரி" (பட்டினப். 6); "கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்" (கம்ப. ஆற்றுப். 19)

4 "வீமலி கான்யாற்றின் றுருத்தி" (பரி. 10 : 30); "நிலம்பூத்த மரம்" (கலித். 27 : 9)