122

பத்துப்பாட்டு

தன் பார்ப்பு கவவு முனையின் ஓம்பவும் - மனையைச் சூழ்ந்த நொச்சியின் நிழலிடத்துக் கிடந்த ஈற்றுத் தொழிலையுடைத்தாகிய யாமையினுடைய பார்ப்பைத் தான் தின்றலை வெறுத்ததாயின், அதனைப்பின்பு பசித்த காலத்துத் தின்பதாகப் பாதுகாத்து வைப்பவும்,;

எனவே, மருத நிலத்திலிருக்குங்காக்கை நெய்தனிலத்துப் பார்ப்பைத் தின்னுமென்றார்.;

"தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன" (தொல். மரபு . சூ. 5) என்பதனாற் பார்ப்பென்றார்.;

187. இளையோர் வண்டல் அயரவும் - அவ்வுழவர் மகளிர் நெய்தல் நிலத்தின் மணற்குன்றிலே வண்டலிழைத்து விளையாடவும்,;

187 - 8. [ முதியோர், அவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்] பகை முதியோர் அவை புகு பொழுதில் தம் முரண்செலவும் - பகைமை முதிர்ந்தோர் தனது அரசவையிற் சென்று புகுங்காலத்துத் தம் மாறுபாட்டைப் போக்கும்படியாகவும், பெரிதாண்ட (229) என மேலே கூட்டுக.

என்ற, 1வழக்குமாறுபட்டு வந்தோர்க்கு அவ்வழக்குவீடறுப்ப னென்றவாறு; 2 "உரை முடிவு காணான்" (21) என்னும் பழமொழி கூறினார்.

189 - 92. [முடக்காஞ்சிச் செம்மருதின், மடக்கண்ண மயிலாலப், பைம்பாகற் பழந்துணரிய, செஞ்சுளைய கனிமாந்தி :] பை பாகல் பழம் செ சுளைய துணரிய கனி மாந்தி முடம் காஞ்சி செ மருதின் மட கண்ண மயில் ஆல - பசிய பாகற்பழத்தையும் சிவந்த சுளையையுடையவாகிய குலைகொண்ட பலாப்பழத்தையும் தின்று வளைவையுடைய காஞ்சிமரத்திலும் செவ்விய மருதிலுமிருந்த மடப்பத்தைத் தம்மிடத்தேயுடைய வாகிய


1 "இளமை நாணி முதுமை யெய்தி, உரைமுடிவு காட்டிய வுரவோன்" (மணி. 4 : 107 - 8)

2 "உரைமுடிவு காணா னிளமையோ னென்ற, நரைமுது மக்களுவப்ப - நரைமுடித்துச், சொல்லான் முறைசெய்தான் சோழன் குல விச்சை, கல்லாமற் பாகம் படும்" என்பது பாட்டு ; ‘தம்முள் மறுதலை யாயினாரிருவர் தமக்கு முறைமை செயவேண்டி வந்து சிலசொன்னால் அச்சொன் முடிவுகண்டே ஆராய்ந்து முறைசெய்ய அறிவுநிரம்பாத இளமைப் பருவத்தானென்றிகழ்ந்த நரைமுதுமக்கள் உவக்கும் வகை நரை முடித்துவந்து முறைவேண்டிவந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே ஆராய்ந்தறிந்து முறைசெய்தான் கரிகாற்பெருவளத்தானென்னுஞ் சோழன்; ஆதலால், தத்தங்குலத்துக்குத்தக்க விச்சைகள் கற்பதற்குமுன்னே செம்பாகமுளவா மென்றவாறு' என்பது இதனுரை.