154

யுடையதாகிய செங்கழுநீர்ப் பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை,

43 - 4. பைங்கறி நிவந்த பலவின் நீழல் மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர-பசிய மிளகுகொடி படர்ந்த பலாவின் நீழலிலே மஞ்சளினது மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகைத்தடவ,

45. விளையா இள கள் நாற மெல்குபு பெயரா - முற்றாத இளையதேன் நாற மென்று1அசையிட்டு,

46. குளவி பள்ளி பாயல் கொள்ளும் - காட்டுமல்லிகையாகிய படுக்கையிலே துயில்கொள்ளும்,

47. குட புலம் காவலர் மருமான் - மேற்றிசைக்கணுள்ள நிலத்தைக் காத்தற்றொழிலையுடைய சேரர் குடியிலுள்ளோன்,

எருமை (42) நீழலிலே (43) தைவரப் (44) பெயராக் (45) கொள்ளும் (46) குடபுலமென முடிக்க.

47-9. ஒன்னார் வடபுலம் இமயத்து வாங்கு வில்2பொறிந்த எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் - பகைவருடைய வடக்கின் கண் உள்ளதாகிய நிலத்திடத்தே நிற்கும் இமவானின்கண்ணே வளையும் வில்லை வைத்த கணையத்தை மாறுபடும் திணிந்த தோளினையும் நடக்கின்ற தேரினையுமுடைய குட்டநாட்டையுடையோன்,

50. வரு புனல் வாயில் வஞ்சியும் வறிது - பெருகுகின்ற நீரையும் கோபுரவாயிலையுமுடைய வஞ்சியென்னும் ஊரும் தரும்பரிசில் சிறியதாயிருக்கும்;

மருமான் (47) குட்டுவன் (49) அவனுடைய வஞ்சியும் வறிதென முடிக்க.

50. அதாஅன்று - அவ்வூரன்றி,

51-2. நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து அறைவாய் குறு துணி - தேனைப் பூக்கள் தம்மிடத்தினின்று துளிக்கும் இளமை முதிர்ந்த நுணாமரத்தினது வெட்டின வாயையுடைய குறிய குறட்டை,

52 - 3. [அயிலுளி பொருத, கைபுனை செப்பங் கடைந்த மார்பின்:] அயில் உளி கடைந்த கைபுனை செப்பம் பொருத மார்பின் மந்தி (56) - கூர்மையையுடைய உளிகள் உள்ளேசென்று கடைந்த சாதிலிங்கந் தோய்ந்த3சேப்புச் சேர்ந்த மார்பின் மந்தி,


1 அசை போடலெனவும் இத்தொடர் வழங்கும்.

2 பொறித்தல் - வைத்தல்: "மாபொறித்த மால் - திருமார்பிடத்தே திருமகளை வைத்த மால்" (முல்லை. 2 - 3, ந.)

3 சேப்பு - செம்மைநிறம்; "கழற்கால் சேக்கும், சேப்புடையார்" (திருவாப்பனூர்ப்புராணம், பாயிரம், 3)