164

தாழை அன்னம் பூப்பவும் (146) - தாழை அன்னம்போலப் பூக்கை யினாலும்,

தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும் (147) - இளவேனிற் காலந் தொடங்குகின்ற நாளிலே 1செருந்தி தன்னைக் கண்டாரைப் பொன்னென்று மருளப் பண்ணுகையினாலும்,

கடு சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் (148) - 2ழுதற் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கையினாலும்,3கன்னியாய் நின்று அரும்புதலிற் கடுஞ்சூல், கழாஅல - கழற்ற.

நெடு கால் புன்னை நித்திலம் வைப்பவும் (149) நெடிய தாளினையுடைய புன்னை நித்திலம்போல அரும்புகையினாலும்,

151. பாடல் சான்ற நெய்தல் நெடு வழி பட்டினம் (153) - புகழ்தலமைந்த நெய்தனிலத்து நெடியவழியிற் பட்டினம்,

152. மணி நீர் வைப்பு பட்டினம் (153) - நீலமணிபோலும் கழி சூழ்ந்த ஊர்களையுடைய பட்டினம்,

மதிலொடு பெயரிய பட்டினம் (153) - மதிலோடே பெயர் பெற்ற பட்டினம்,

என்றது 4எயிற்பட்டின மென்றதாம்.

153. பனி நீர் படுவின் பட்டினம் படரின் - குளிர்ச்சியையுடைய நீரையுடைய குளங்களையுடைத்தாகிய எயிற்பட்டினத்தே செல்வீராயின்,

படு: மடுவுமாம்.

154. ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன-உயர்ந்த தன்மையை யுடைய ஒட்டகம் உறக்கத்தே கிடந்தாலொத்த,


1 "பொன்னடர்ந் தன்ன வொள்ளிணர்ச் செருந்திப், பன்மலர் வேய்ந்த" (அகநா. 280 : 1 - 2)

2 "கடுஞ்சூல் மந்தி - முற்பட்ட சூலையுடைய மந்தி" (பெரும்பாண். 395, ந.), "கடுஞ்சூல் மகளிர் - முதற்சூல் கொண்ட மகளிர்"(மதுரைக். 609, ந,) "கடுஞ்சூலா நாகு - முதற்சூல் கொண்ட பசு" (கலித். 110 : 14) என்று பிறவிடங்களிலும் நச்சினார்க்கினியர், ‘கடுஞ்சூல்' என்பதற்கு இவ்வாறே பொருளெழுதுதல் அறியத்தக்கது; "பிணங் கடுங்கனலும்" (தக்க. 50) என்பதன் உரையில், ‘கடுங்கனல் - புதுக்கனல்' என்று அதன் உரையாசிரியர் எழுதியிருத்தலால், கடுமையென்பது புதுமையென்னும் பொருடருவதென்று அறியப்படுதலின், அப்பொருளை உட்கொண்டு இவ்வாறு எழுதி வருகின்றாரென்று தோற்றுகின்றது.

3 (பி-ம்) ‘கண்ணியாய்'

4 "எயிற்பட்டினம்: "இம்மென் முழவி னெயிற்பட்டின நாடன்" (சிறுபாண். இறுதிவெண்பா)