211

உடைத்தாகிய வண்டையுடைய பூவினுடைய வயிற்றிடத்தைப் பிளந்த புலாலினுடைய (பி-ம்). பூவினுடைய) உள்ளிடத்தை யொக்கும் 1நிறமூட்டுதலுற்ற தோல்,

7-8. பரிய அரை கமுகின் பாளை அம் பசு பூ கரு இருந்தன்ன கண் கூடு செறி துளை- பரிய தாளினையுடைய கமுகினது பாளையாகிய அழகினையுடைய பசிய பூ விரியாமற் கருவாயிருந்தாலொத்த இரண்டு கண்ணுங் கூடின செறிந்ததுளை,

9. உருக்கி அன்ன பொருத்துறு போர்வை - உருக்கி ஒன்றாக வார்த்தாற்போன்ற தோல்களின் வேறுபாடு தெரியாமல் இசைத்தலுறும் போர்வையினையும்,

பச்சைப்(6) போர்வை; பொருத்துறு போர்வை; துளையினையுடைய (8) போர்வை.

10. சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறு வாய்-சுனை வற்றி உள் இருண்டாலொத்த இருள்செறிந்த 2உண்ணாக்கினையில்லாதவாயினையும்,

11. பிறை பிறந்தன்ன பின் ஏந்துகவை கடை- முதற்பிறை பிறந்து ஏந்தியிருந்தாற்போன்ற, பின்பு ஏந்தியிருக்கின்ற கவைத்தலையுடைய கடையினையும்,

12-3. நெடு பணை திரள் தோள் மடந்தை முன் கைகுறு தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்-நெடிய மூங்கிலையொத்த திரண்ட தோளினையுடைய மகளுடைய முன் கையிற் குறிய தொடியை யொக்கும் 3நெகிழ வேண்டிய வழி நெகிழ்ந்து இறுகவேண்டிய வழி இறுகும் வார்க்கட்டினையும்,

14. மணி வார்ந்தன்ன மா இரு மருப்பின்-நீலமணி ஒழுகினாலொத்த கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினையுமுடைய,

15-6. பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் தொடை அமை கேள்வி- பொன் கம்பியாய் ஒழுகினாலொத்த முறுக்கடங்கின நரம்பின் கட்டமைந்த யாழை,

கேள்வி: ஆகுபெயர்.

போர்வையினையும்(9) வாயினையும்(10) கடையினையும்(11) திவவினையும்(3) மருப்பினையுமுடைய(14) யாழையென முடிக்க.


1. "துவரூட்டின கைத்தொழிலாற் பொலிவுபெற்ற போர்வை" (சிறுபாண்.225-6, ந.)

2. "அண்ணா வில்லா வமைவரு வறுவாய்" (பொருந. 12)

3. "நெகிழ வேண்டுமிடத்து நெகிழ்ந்தும் இறுக வேண்டுமிடத்து இறுகியும் நரம்புதுவக்கும் வார்க்கட்டினையும்" (சிறுபாண். 221-2,ந.)