102

பத்துப்பாட்டு

செய்யோளென்றார், மயிரொழுங்கு விளங்கித் தோற்றுதற்கு.

7. ஐது மயிர் ஒழுகிய தோற்றம்போல - 1ஐதாகிய மயிர் ஒழுங்கு படக் கிடந்த 2தோற்றரவுபோல,

8. பொல்லம் பொத்திய பொதி உறு போர்வை - இரண்டு தலையும் கூட்டித்தைத்த மரத்தைப் பொதிதலுறும் போர்வையினையும்,;

9 - 10. அளை வாழ் அலவன் கண் கண்டன்ன துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி - முழையிலே வாழ்கின்ற ஞெண்டின் கண்ணைக் கண்டாலொத்த பத்தலிரண்டுஞ் சேர்த்தற்குத் திறந்த துளைகளின் வாய் மறைதற்குக் காரணமாகிய முடுக்குதலமைந்த ஆணியினையும்,;

தோல் ஞெகிழாமல் முடுக்கின ஆணியென்று முரைப்பர். 

அன்ன ஆணி யென்க.

11 - 2. எண்ணாள் திங்கள் வடிவிற்று ஆகி அண்ணா இல்லா அமைவரு வறு வாய் - உவாவிற்கு எட்டாநாளில் திங்களின் வடிவை உடைத்தாய் உண்ணாக்கில்லாத பொருந்துதல் வந்த வறிய வாயினையும்,;

13. பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின் - பாம்பு தலையெடுத்தாலொத்த ஓங்கின கரிய தண்டினையும்,;

14. 3மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் திவவின் (15) - கரிய நிறத்தையுடையோளுடைய முன்கையில் அழகினையுடைய நேர்ந்த தொடியை யொக்கும் வார்க்கட்டினையும்,;

15. கண்கூடு இருக்கை திண் பிணி திவவு - ஒன்றோடொன்று நெருங்கின இருப்பையுடைத்தாகிய திண்பிணிப்பினையுடைய திவவு.;

இது நரம்பு துவக்கப்படுவது.;

16 - 8. ஆய் தினை அரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் கேள்வி போகிய நீள் வீசி தொடையல் - அழகினையுடைய தினையரிசியிற் குத்தலரிசியை ஒத்த குற்றம்போகிய விரலாலசைக்கும் நரம்பினையுடைய இசைமுற்றுப்பெற்ற நீண்ட விசித்தலையுடைய தொடர்ச்சியினையும்.

19. மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன காட்சி (20) - கலி யாணஞ் செய்தமை தோற்றுகின்ற மாதரை ஒப்பித்தாலொத்த அழகினையுமுடைய,;

20. அணங்கு மெய் நின்ற அமை வரு காட்சி - 4யாழிற்குரிய தெய்வம் தன்னிடத்தேநின்ற இலக்கணம் அமைதல்வரும் அழகு.


1 ஐதாகிய - மெல்லிதாகிய; சிறுபாண். 13, உரை.

2 தோற்றரவு - தோன்றுதல்; பொருந. 55, உரை.

3 "மாயோள் - கருநிறத்தையுடையாள்" (தக்க. 104, உரை)

4 யாழிற்குரிய தெய்வம் மாதங்கி; சீவக. 411, 550, ந.