104

பத்துப்பாட்டு

1சீரெனவே பாணியும் தூக்கும் உளவாயின.

25. அறல் போல் கூந்தல் - ஆற்றல்போலும் கூந்தலினையும், 

பிறை போல் திரு - நுதல் - பிறைபோல அழகினையுடைய நுதலினையும். 

26. கொலை வில் புருவத்து - கொலைத்தொழிலையுடைய விற்போலும் புருவத்தினையும், 

கொழு கடை மழை கண் - அழகிய கடையினையுடைய குளிர்ச்சியையுடைய கண்ணினையும், 

27. இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் - இலவினது இதழையொக்கும் இனிய சொல்லையுடைய செம்மையுடைத்தாகிய வாயினையும், 

28. பல உறு முத்தின் பழி தீர் வெள் பல் - பலவுஞ்சேர்ந்த முத்துக்கள் போற் குற்றந்தீர்ந்த வெள்ளிய பல்லினையும், 

பலமுத்தென்றார், ஒருகோவையாயிருத்தலின்; இனிப் பலவிலையுற்ற முத்தென்றுமாம். 

29 - 30. [ மயிர்குறை கருவி மாண்கடை யன்ன, பூங்குழை யூசற் பொறைசால் காதின் :]

மயிர் குறை கருவி மாண் கடை அன்ன (29) காதின் (30) - மயிரை வெட்டுகின்ற கத்தரிகையினுடைய மாட்சிமைப்பட்ட குழைச்சையொத்த காதினையும், 

பூ குழை 2ஊசல் பொறை சால் காது (30) - பொலிவினையுடைய மகரக்குழையினுடைய அசைவினைப் பொறுத்தலமைந்த காது. 

31. நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் - நாணம் வருத்தலாற் பிறரை நோக்காது கவிழ்ந்த நன்மை விளங்குகின்ற கழுத்தினையும், 

32. ஆடு அமை பணை தோள் - அசைகின்ற மூங்கில் போலும் பெருத்தலையுடைய தோளினையும், 
அரி மயிர் முன்கை - 3ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும், 

33. நெடுவரை மிசைய காந்தள் மெல் விரல் - நெடிய மலையின் உச்சியிடத்தனவாகிய காந்தள்போலும் மெல்லிதாகிய விரலினையும், 

34. கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் - கிளியினது வாயோடு ஒப்பினையுடைய ஒளிவிடுகின்ற பெருமையையுடைத்தாகிய உகிரினையும், 


1 சீர் முதலியவை தாளவிசேடங்கள்; சீர், முடியுங்காலத்தைத் தன்னிடத்தே உடையது; பாணி, எடுக்குங் காலத்தைத் தன்னிடத்தே உடையது; தூக்கு, நிகழுங் காலத்தைத் தன்னிடத்தே உடையது; கலித். கடவுள். ந.

2 ஊசல் - அசைவு; "ஊசலாடும் - அசைகின்ற" (சீவக. 68, ந.)

3 "ஐதுமயிரொழுகிய" (பொருந. 7)