2 - பொருநராற்றுப்படை 35. அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து முலை (36) - பிறர்க்கு வருத்தமெனத் தோன்றின சுணங்கணிந்த மார்பிடத்து முலையினையும், 36. ஈர்க்கு இடை போகா ஏர் இள வனம் முலை - ஈர்க்கும் நடுவே போகாத எழுச்சியையுடைய இளைய அழுகினையுடைய முலை, 37. நீர் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் - நீரிடத்துப் பெயர் தலையுடைய சுழிபோல உத்தம இலக்கணங்கள் நிறைந்த கொப்பூழினையும்,; 38. உண்டென உணரா உயவும் நடுவின் - உண்டென்று பிறருண ரப்படாத வருந்துமிடையினையும்,; உயவினென்று பாடமாயின், வருந்துதலையுடையவென்க.; 39. வண்டு இருப்பு அன்ன 1பல் காழ் அல்குல் - பல வண்டினங்களின் இருப்பையொத்த பல மணிகோத்த வடங்களையுடைய மேகலையணிந்த அல்குலையும்,; காழ் : ஆகுபெயர். 40. இரு பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் - பெரிய பிடியினுடைய பெருமையையுடைய கைபோல ஒழுகவந்து மெல்லிதாகத் தம்மில் நெருங்கி ஒன்றித்திரண்ட குறங்கினையும்,; 41. பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப - கணைக்காற்கு இலக்கணமென்றற்குப் பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட ஏனையிலக் கணங்கள் திருந்தின கணைக்காலுக்குப் பொருந்த,; 42. [ வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி :] வருந்து நாய் நாவின் சிறு அடி - ஓடியிளைத்த நாயினது நாப்போலச் சிறிய அடியினையும்,; 41 - 2. தாட்கு ஒப்ப பெரு தகு அடி - தாளுக்குப் பொருந்தப் பெருமை தக்கிருக்கும் அடி யென்க.; 2பெருவென்னு முதனிலை பெருமையையுணர்த்தி நின்றது.; 43. அரக்கு உருக்கு அன்ன செ நிலன் ஒதுங்கலின் - சாதிலிங்கத்தை உருக்கின தன்மையையொத்த செய்யநிலத்தே நடக்கையினாலே,; 44. பரல் பகை உழந்த நோயொடு சிவணி - சுக்கான்கல்லாகிய பகையாலே வருந்தின நோயோடே பொருந்தி,;
1 முருகு. 16. உரையையும் அதன் குறிப்புரையையும் பார்க்க.; 2 "கருவார் பொழில்" (தே. பிரமபுரம்), "கருக்கொள் சோலை" (தே. ஆரூர்) என்பவற்றில், கருவென்னும் முதனிலை கருமையை யுணர்த்தி நின்றமை காண்க.
|