"விரித்தாற்போல விரித்துப்பார்த்து இவர்கள் சாயற்கு ஒவ்வேமென்று பேட்டிற்குள்ளே சென்று மறைதற்குக் காரணமாகிய 1கட்புலனாகிய மென்மையினையும், 16 - 8. சாஅய் உயங்கு நாய் நவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின்-ஓடியிளைத்து வருந்துகின்ற நாயினது நாக்கினுடைய நல்ல அழகை வருத்தி வறுமையாலே விளங்குகின்ற சிலம்பு முதலியனவின்றிப் பொலிவழிந்த அடியினையும், 18 - 19. [அடிதொடர்ந், தீர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கையின்:] ஈர்ந்து நிலம் தோயும் இரு பிடி தட கையின் அடி தொடர்ந்து - இழுக்கப்பட்டு நிலத்தே செறியும் கரிய பிடியினது பெருமையையுடைய கைபோலத் தாமும் அடியோடே தொடர்புபட்டு முறையாற் பருத்து, 20 - 21. [சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென. மால்வரை யொழுகிய வாழை:] மால் வரை ஒழுகிய வாழை என சேர்ந்து - பெருமையையுடைய மலையிலே ஒழுங்குபட வளர்ந்த வாழையெனத் திரண்டு, 2சேரென்னு முரிச்சொல் முதனிலையாகச் சேர்ந்தென்னும் வினையெச்சம் வந்தது. குறங்குடன் செறிந்த குறங்கின் - ஒரு குறங்குடனே ஒரு குறங்கு நெருங்கியிருக்கின்ற குறங்கினையும், 21 - 2. வாழை பூ என பொலிந்த ஓதி - வாழையினது பூ வென்னும் படி அழகுபெற்ற 3பனிச்சையினையும், 22 - 4. [ஓதி, நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக், களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கிற் சுணங்குபிதிர்ந்து:] களி சுரும்பு நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி ஓதி அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து - களிப் பினையுடைய சுரும்புகள் செறிவினையுடைத்தாகிய கொம்பினையுடைய வேங்கையினது நாட்காலத்து மலரென்று விரும்பிப்பாடி ஆரவாரிக்கும் ஓரிடத்திற்றோன்றிய சுணங்குடனே ஓரிடத்திற்றோன்றிய சுணங்கு பிதிர்பட்டு,
1 "சாயலென்னுஞ்சொல், மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறியானுநுகரும் மென்மையை உணர்த்தும்" (தொல். உரி. சூ. 27, ந.); " ‘சாயன் மென்மை' என்று பொதுப்படச் சூத்திரஞ் செய்தது ஐம்பொறியானு நுகருமென்மையெல்லாம் அடங்குதற்கு" (சீவக. 8, ந.) 2 "சேரே திரட்சி" (தொல். உரி. சூ. 65) 3பனிச்சை - மகளிர்கூந்தலின் ஐம்பால்களுள் ஒன்று (முன்னுச்சி மயிர்); தக்க. 25, உரை.
|