புன்னையையும் குறிய மலைகளையுமுடைய நன்றாகிய நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்த ஓரி,
110 - 11. காரி குதிரை காரியொடு மலைந்த ஓரி குதிரை ஓரியும் - காரியென்னும் பெயரையுடைத்தாகிய குதிரையையுடைய காரியென்னும் பெயரையுடையவனுடனே போர்செய்த ஓரியென்னும் பெயரை யுடைத்தாகிய குதரையையுடைய ஓரியென்னும் வள்ளலும்,
காரி கரிய குதிரையென்றும், ஓரி பிடரிமயிரென்றும் கூறுவாருமுளர்.
111 - 3. [எனவாங், கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோ, ளெழுவர் பூண்ட வீசைச் செந்நுகம்:]
என எழுவர் ஆங்கு பூண்ட ஈகை செ 1நுகம் - என்று சொல்லப் பட்ட எழுவரும் அக்காலத்தே மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரத்தை,
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் எழுவர் - தம்மேலே வருகின்ற போர்களைக் கடந்த கணையத்தோடு மாறுபடுகின்ற திணிந்த தோளினையுடைய எழுவர்,
114 - 26. [விரிகடல் வேலி'வியலகம் விளங்க, வொருதான் றாங்கிய வுரனுடைய நோன்றா, ணறுவீ நாகழு மகிலு மாரமும், துறையாடு மகளிர்க்குத் தோட்புணை யாகிய, பொருபுன றரூஉம் போக்கரு மரபிற், றொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய, நன்மா விலங்கை மன்ன ருள்ளும், மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வா, ளுறுபுலித் துப்பி னோவியர் பெருமகன், களிற்றுத்தழும் பிருந்த கழுறயங்கு திருந்தடிப், பிடிக்கணஞ் சிதறும் பெயன்மழைத் தடக்கைப், பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை, நல்லியக் கோடனை நயந்த கொள்கையொடு:]
விரி கடல் வேலி வியலகம் விளங்க (114) ஒரு தான் தாங்கிய (115) நல்லியக் கோடனை நயந்தனிர் செலின் (269) - பரந்த கடலாகிய வேலியையடைய உலகமெல்லாம் விளங்கும்படி ஒருவனாகிய தானே பொறுத்த நல்லியக் கோடனை விரும்பிச் செல்லின்,
மறு இன்றி விளங்கிய (121) உரன் உடை நோன்றாள் (115) வடு இல் வாய் வாள் (121) உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன் (127) - குற்றமின்றி விளங்கிய அறிவையுடைத்தாகிய வலியையுடைய முயற்சியினையும் பகைவர் முகத்தினும் மார்பினும் வெட்டின வாய்த்தவாளையும் மிக்க புலிபோலும் வலியினையுமுடைய ஓவியருடைய குடியிலுள்ளோன்,
1நுகம்-பாரம்: "படுநுகம் - பெரிய பாரத்தை" (சீவக. 203, ந.); "நோன்மை நுகம் பூண்டார்" (சீவக. 2794); "பொழில்கண் விளக்குந் தொழினுகம் பூண்டு" (பெருங். 1.33 : 54)