177

துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த இயல்பினையுமுடைய மகளிர் அகிற்புகையை உண்ணும்படியாக விரித்த அழகையுடைய மெல்லிய கூந்தல்போலே,

264 - 5. [மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித், துணிமழை தவழுந் துயல்கழை நெடுங்கோட்டு:]

துணி மழை மணி மயில் கலாபம் இடை மஞ்சு பரப்பி தவழும் கோடு - தெளிந்தமேகம் நீலமணிபோலும் மயிலினுடைய விரிந்த தோகைக்கு நடுவே தனது மஞ்சைப்பரப்பித் தவழுமலை,

சிறிதுநீர் உட்கொண்டு பக்கம் வெள்ளியமாசாயிருத்தலின், மேகம் மஞ்சைப்பரப்பியென்றார்.

இனி, ‘மணிமயில் கலாபம்' என்று பாடமாயின், மயிலை தன் கலாபத்தை மஞ்சிடையிலே பரப்புதலைச் செய்து துயல் கோடென்க; துயலல் - ஆடுதல்.

துயல் கழை நெடு கோடு - அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையிடத்தையுடைய குறிஞ்சி (267)

266. [எறிந்துரு மிறந்த வேற்றருஞ் சென்னி:] ஏற்று அரு உரும் எறிந்து இறந்த சென்னி கோடு (265) - ஏறுதற்றொழில் அரிதாகிய உருமேறு தான் ஏறுதற்காக இடித்து வழியாக்கிப்போன சிகரத்தையுடைய மலை,

இக்குதிரையேற்றரிதென்ப.

267. குறிஞ்சி கோமான் - குறிஞ்சியாகிய ஒழுக்கத்தையுடைய நிலத்திற்கு அரசன்,

267 - 9. 1 கொய் தளிர் கண்ணி செல் இசை நிலைஇய பண்பின் நல்லியக்கோடனை - கொய்யப்பட்ட தளிர்விரவின மாலையினையும், பிறரிடத்து நில்லாமற்போகின்ற புகழ் தன்னிடத்தே நிற்றற்குக் காரணமான குணத்தினையுமுடைய நல்லியக்கோடனை,

269. நயந்தனிர் செலின்- விரும்பிச்செல்லின்,

முதுவாயிரவல (40) பெருமகன் (122) புரவலனாகிய (125) நல்லியக்கோடனை நயந்தகொள்கையோடே (126) முன்னாட்சென்றனமாக, இந்நாள் (129) அழிபசிவருத்தம்வீட (140) யானையோடே தேரெய்தி (142) யாம் அவணின்றும்வருகின்றோம்; இனி நீயிரும் (143) மூவேந்தரிடத்துச் செல்குவிராயின் (145) வஞ்சியும் வறிது; அதுவன்றி (50) மதுரையும் வறிது; அதுவன்றி (67) உறந்தையும் வறிது; அதுவன்றி (83) எழுவர்பூண்ட ஈகைச் செந்நுகம் (113) ஒருதான்றாங்கிய (115) குறிஞ்சிக் கோமானாகிய (267) நல்லியக்கோடனை நயந்தனிர்செலின் (269)


1 ‘கொய்' என்பதற்கு, ‘கத்தரிகையாலே மட்டஞ்செய்த' என்று உரை எழுதுவர் புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியர்; பு. வெ. 38.