246

368-9. [நன்னகர், விண்டோய் மாடத்து விளங்குசுவ ருடுத்த :] விளங்கு சுவர் உடுத்த விண் தோய் மாடத்து நல் நகர்-விளங்குகின்ற மதில் சூழ்ந்த விண்ணைத்தீண்டும் மாடங்களையுடைய நன்றாகிய ஊர்களிலே,

370-71. 1வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் நாடு பல கழிந்த பின்றை-வாடுங்கொடியினையுடைய வள்ளியல்லாத வள்ளிக்கூத்தின் வளப்பம் பலவற்றையுந் தருதற்குக்காரணமாகிய புறநாடுபலவற்றையும் போனபின்பு,

வளம்பலவென்றார், இக்கூத்து ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாய் வருதலின்.

என்றது, சிறப்புடைநாடுகளைப்பாடித் தாழ்ச்சிபெற்ற இழிகுலத்தோருறையும் புறநாடுகளைப் பாடாமல்தொகுக்கின்றார், அவை புறநாடென்பதுதோன்ற அவர்கள் காண்டற்குரிய வள்ளிக்கூத்தினைக்கூறி அதனை வெளிப்படுத்தினார். இது, புறத்தினையியலில், "வெறியறிசிறப்பு"(தொல். புறத்.சூ. 5) என்னுஞ்சூத்திரத்து, ‘வாடாவள்ளி' என்பதனானும், 2"மண்டம ரட்டமறவர் குழாத்திடை" என்னுமுதாரணத்தானும் உணர்க.

371-2. நீடு குலை காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்கு-நீண்ட பூங்கொத்துக்களையுடைய காந்தளையுடைய அழகிய பக்க மலையிலே யானை கிடந்தாற்போல,

373. பாம்பு அணைபள்ளி அமர்ந்தோன் ஆங்கண்-பாம்பணையாகிய படுக்கையிலே துயில்கொண்டோனுடைய 3திருவெஃகா விடத்து,


1 "வாடாவள்ளி-வாடுங்கொடியல்லாத வள்ளிக்கூத்து ; அஃது இழிந்தோர் காணுங் கூத்து. உ-ம். ‘மண்டம.........பெரிது' இது பெண்பாற்குப் பெருவரவிற்று. இதனைப்பிற்கூறினார், வெறியறி சிறப்பன்மையானும் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாவதல்லது அகத்திணைக்கண் வந்து பொதுவாகாமையும்பற்றி" (தொல். புறத். சூ. 5,ந. ) என்பது இங்கே கூறியசெய்திகளை விளக்கும்.

2 "மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக், கண்ட முருகனுங் கண்களித்தான்-பண்டே, குறமகள் வள்ளிதன் கோலங்கொண்டாடப், பிறமகள் நோற்றாள் பெரிது" (தொல். புறத். சூ. 5, ந. மேற்.)

3 திருவெஃகாவென்பது திருமாலினுடைய நூற்றெட்டுத் திருப்பதிகளுளொன்று. இது காஞ்சிப்பதியிலுள்ளது. இங்கே திருமால் சேஷசயனத்திருக்கோலமுடையவராக எழுந்தருளியிருக்கின்றார் ; "பாந்தட்பாழியிற் பள்ளி விரும்பிய, வேந்தனைச்சென்று காண்டும் வெஃகாவுளே" (திவ். பெரியதி. 10, 1 : 7)