250

முற்பட்ட சூலையுடைய மந்தி 1பரிக்கோலையுடையோர் நெகிழ்ந்தசெவ்வியைப்பார்த்து எடுத்துக்கொண்டுபோய்த் தின்னும் சோலையினையும்,

397. திண் தேர் குழித்த குண்டு நெடு தெருவின்-திண்ணியதேர்கள் பலகால் ஓடிக்குழித்த தாழ்ச்சியையுடைய நெடிய தெருவினையும்,

398-400.[படைதொலை பறியா மைந்துமலி பெரும்புகழ்க், கடைகால் யாத்த பல்குடி கெழீஇக், கொடையுங் கோளும் :]

தொலைபு அறியா மைந்து மலி பெரு புகழ் படை(398) - கெடுதலறியாத வலிமிகுகின்ற பெரிய புகழினையுடைய படையினையும்,

2கொடையும் கோளும் (400) கெழீஇ கால் யாத்த பல் குடி கடை (399)-பண்டங்களை விற்றலும் கொள்ளலும்பொருந்தி அவ்விடத்து நெருங்கின பல குடிகளையுடைய கடையினையுமுடைய மூதூர் (411)

400-401. 3வழங்குநர் தடுத்த அடையா வாயில்-உலகத்துக் கொடுப்பாரைக் கொடாமல் தடுத்த 4பரிசிலர்க்கு அடையாத வாசலினையும்,

இவன் கொடைபெருமையாற் பிறர்தவிர்ந்தாரென்றார்.

401. மிளை சூழ் படப்பை-காவற்காடு சூழ்ந்த பக்கத்தினையும்,

402-4. [நீனிற வுருவி னெடியோன் கொப்பூழ், நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த், தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி :] நான்முக ஒருவன் பயந்த நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் பல் இதழ் தாமரை பொகுட்டின் காண் வர தோன்றி - நான்குமுகத்தையுடைய ஒருவனைப்பெற்ற நீலநிறத்தையுடைத்தாகிய வடிவினையுடைய திருமாலுடைய திருவுந்தியாகிய பல இதழையுடைய தாமரையினது கொட்டைபோல அழகுவிளங்கத்தோன்றி,

இதனாற் பழமையும் (பி-ம்.பெருமையும்) சிறப்பும் தூய்மையுங் கூறினார்.


1 பரிக்கோற்காரர் - குத்துக்கோற்காரர் : "கோலோர் - பரிக்கோற்காரர்", "காழோர்-பரிக்காரர்" (மதுரைக். 381 658, ந.) ; இவர்கள் யானை வலிசெய்யுமாயின் அதனைக் குத்துதற்கு அதன் முன் நடந்து செல்பவர்கள்; "எதிர்பரிக் கார ரோட" (பெரிய. எறிபத்த. 12)

2 "கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைபடாது" (பட்டினப். 210)

3 இதன் பொருள்நயம் பாராட்டத்தக்கது.

4 "நசையுநர்த் தடையா நன்பெரு வாயில்" (பொருந. 66) ; "அடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லு, முடையான் சடையப்பனூர்" (தனிப்.)