275

1விட்டிருந்து அரசனுக்கு மேல்வரும் ஆக்கத்தை யறிதற்கு விரிச்சியோர்த்தல் வேண்டுமென்று புறத்திணையியலுட் கூறினமையான், ஈண்டும் அவ்வாறே கூறினார், ‘அது, "வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவி, னாதந் தோம்பன் மேவற் றாகும்", "படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி" (தொல். புறத். சூ. 2,3) என்னுஞ் சூத்திரங்களானும், "திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி, நரைமுதியோ னின்றுரைத்த நற்சொன்-னிரையன்றி, யெல்லைநீர் வையமிறையோற் களிக்குமால், வல்லையே சென்மின் வழி" என்னும் உதாரணத்தானுமுணர்க. இவர் இதுகேட்டு நிரைகொண்டால் அரசன் வஞ்சி சூடி மண்ணசையால் மேற்செல்வ னென்பது. ஆண்டு, "எஞ்சாமண்ணசை" (தொல். புறத். சூ, 7) என்னுஞ் சூத்திரத்திற் கூறியவாறே ஈண்டுக் கூறினார். அது மேல், "முனை கவர்ந்து" (19)என்பதனானுணர்க.

12-8, [சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி, னுறுதுய ரலமரனோக்கி யாய்மக, ணடுங்குசுவ லசைத்த கையள் கைய, கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர, வின்னே வருகுவர் தாய ரென்போ, ணன்னர் நன்மொழி கேட்டன மதனா, னல்ல நல்லோர் வாய்ப்புள்;]

நன்னர் (17) வாய்ப்புள் (18) - அவர்கேட்ட நன்றாகிய நற்சொல்,

ஆய் மகள் (13) நடுங்கு சுவல் அசைத்த கையள் (14) - இடைச் சாதியின் மகள் குளிரால் நடுங்குகின்ற தோளின்மேலே கட்டின கையளாய் நின்று,

சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின் (12) உறு துயர் அலமரல் நோக்கி (13) - சிறிய தாம்பாலே காலிலே கட்டப்பட்ட வருத்தத்தையுடையத்தாகிய கன்றினுடைய முலையுண்ணாமலுறுகின்ற துயராலே தாய் வருமென்று சுழலுகின்ற தன்மையைப் பார்த்து,

கைய (14) கொடு கோல் கோவலர் பின் நின்று உய்த்தர (15) - கையிடத்தனவாகிய 2கொடிய கோலையுடைய இடையர் பின்னேநின்று செலுத்துதலைச் செய்கையினாலே 

தாயர் இன்னே வருகுவர் என்போள் (16) நன்மொழி கேட்டனம் (17)-நிரம்ப மேய்ந்து நும்முடைய தாய்மார் இப்பொழுதே வருவரென்று கூறுகின்றறோளுடைய நன்றாகிய வார்த்தையாக யாங்கள் கேட்டோம் ; 


1விட்டிருந்து-தங்கியிருந்து ; முல்லை. 42, உரை ; மதுரைக். 125-7. உரையைப் பார்க்க.

2"விழுத்தண்டூன்றியகை-பசுக்களுக்கு வருத்தஞ்செய்யும்தடியை ஊன்றின கை" (பெரும்பாண். 170, ந.) என்பதனால், ‘கொடியகோல்' என்பதன் பொருள் நன்கு விளங்கும்.