356

165. நிலத்து ஆற்றும் குழூஉ புதவின்-நிலத்திலுள்ளாரையெல்லாம் போக்கும் வாசல்காப்பாரையுடைய வாசலின்கண்ணேயிருந்து,

குழூஉ : ஆகுபெயர்.

இனிக் 1குடுமிதேய்ந்துபோதலின் மண்ணைக் கொழித்துவருமென்பாருமுளர்.

166. அரந்தை பெண்டிர் இனைந்தனர் அகவ-மனக்கவற்சியையுடைய பெண்டிர் வருந்திக் கூப்பிட,

167-8. கொழு பதிய குடி தேம்பி செழு கேளிர் நிழல் சேர-வளவிய ஊர்களிடத்தனவாகிய குடிகளெல்லாம் பசியால் உலர்ந்து புறநாட்டிலிருக்கும் வளவிய சுற்றத்தார் தமக்குப் பாதுகாவலாகச் சென்று சேர,

169-70. நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி குடுமி கூகை குராலொடு முரல - பெரிய மாளிகைகளிலே வெந்துவீழ்ந்த கரிந்த குதிரிடங்களிலே சூட்டினையுடைய கூகைச்சேவல் பேட்டுடனேயிருந்து கதற,

171-2. கழுநீர் பொலிந்த கண் அகல் பொய்கை களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர-செங்கழுநீர்மிக்க இடமகன்ற பொய்கைகளிடத்தே யானை நின்றால்மறையும் வாட்கோரையுடனே சண்பங்கோரையும் நெருங்கிவளர,

செருந்தி-நெட்டிக்கோரையுமாம்.

173-4. நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் பல் மயிர் பிணவொடு கேழல் உகள-நன்றாகிய எருதுகளுழுத நச்சுதலமைந்த விளைகின்ற வயலிடத்தே பலமயிரினையுடைய பெண்பன்றியுடனே ஆண்பன்றி ஓடித்திரிய,

பிணவென்னும் அகரவீற்றுச்சொல் வகரவுடம்படுமெய்பெற்றது ;

"பன்றி புல்வாய் நாயென மூன்று, மொன்றிய வென்ப பிணவென் பெயர்க்கொடை" (தொல். மரபு. சூ. 58) என்றார்.

175. [வாழா மையின் வழிதவக் கெட்டு :] தவ வழி வாழா மையின் கெட்டு-மிக 2நின் ஏவல்செய்து வாழாமையினாலே கெட்டு,

இனித் தவக்கெட்டெனக்கூட்டி மிகக்கெட்டென்றலுமாம்.

176. பாழ் ஆயின-பாழாய்விட்டன,

நின் பகைவர் தேஎம்-நின்னொடு பகைத்தலைச் செய்தவருடைய நாடுகள் ;


1 குடுமி-கதவைத்தாங்கி நிற்பதாயுள்ள ஓருறுப்பு ; "தாய ரடைப்ப மகளிர் திறந்திடத், தேயத் திரிந்த குடுமியவே ..................... கதவு" (முத்.) ; "திருகுங் குடுமி விடிவளவுந் தேயுங் கபாடம்" (கலிங்க. கடை. 49)

2 "தொன்றுமொழிந்து தொழில் கேட்ப" (மதுரைக். 72) என்பது இங்கே கருதற்பாலது.