359

தொழு பிறையின் நின் வலம் படு கொற்றம் வழிவழி சிறக்க-மேற்றி சைக்கட்டோன்றிய 1நின்குலத்திற்குப் பழைதாகிய எல்லாரும் தொழும் பிறை நடோறுஞ்சிறக்குமா போல நின்னுடைய வெற்றியாலே நின்பின் னுள்ளோர்க்கு உண்டாங்கொற்றம் அவர்கள் வழிவழியாக மிகுவதாக ;

195-6. [குணமுதற் றோன்றிய வாரிருண் மதியிற், றேய்வன கெடுகநின் றெவ்வ ராக்கம் :] குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் நின் தெவ்வர் ஆக்கம் தேய்வன கெடுக-கீழ்த்திசைக்கட்டோன்றிய நிறைந்த இருளைத்தருமதி நாடோறும் தேயுமாறுபோல நின்பகைவருடைய ஆக்கம் நாடோறும் தேய்வனவாய்க் கெடுவனவாக ;

197-8. உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே-ஒரு பொய்யாலே உயர்ந்த நிலையையுடைய தேவருலகை அவர்நுகரும் அமுதத்தோடே பெறுவையாயினும் அவற்றைத்தருகின்றபொய் நின்னைக் கைவிட்டு நீங்க மெய்யுடனே நட்புச்செய்தலையுடையை ;

இனி, ‘பொய்சே ணீங்கிய வாய்நடப் பினையே' என்று பாடமாயின் மெய்யை நடத்தலைச் செய்தனையென்க.

199-201. முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் பகைவர்க்கு அஞ்சி பணிந்து ஒழுகளையே-முழங்குகடலாகிய எல்லையையுடைய அகன்ற இடத்தையுடைய உலகத்துள்ளாருடனே உயர்ந்த தேவருலகத்துத்தேவரும் பகைவராய் வரினும் பகைவர்க்கு அஞ்சித் தாழ்ந்து ஒழுகலைச்செய்யாய் ;

202-4. தென்புலம் மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழுநிதி பெறினும் பழிநமக்கு எழுக என்னாய்-தென்றிசைநிலத்தின் மலைகளெல்லாம் நிறையும்படி வாணனென்னும் சூரன் வைத்த சீரிய பொருட்டிரள்களினைப் பெறுவையாயினும் பிறர் கூறும்பழி நமக்கு வருவதாகவென்று கருதாய் ;

204-5. விழு நிதி ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே-சீரிதாகிய பொருளைக் கொடுத்தலையுடைத்தாகிய நெஞ்சுடனே புகழை விரும்புவை;

206. அன்னாய் - அத்தன்மையை யுடையாய்,

[நின்னொடு முன்னிலை யெவனோ :] முன்னிலை நின்னொடு எவனோ-ஐம்பொறிகளுக்கும் நுகரப்படுவனவாய் முன்னிற்கப்படுவனவாகிய இந்நுகர் பொருள்கட்கு நின்னோடு என்ன உறவுண்டு ;


1 "செருமாண் டென்னர் குலமுத லாகலின், அந்தி வானத்து வெண்பிறை தோன்றி" (சிலப். 4:22-3) ; "செந்நிலத் தன்றுதிண்டேர் மறித்துப், பேர்ந்தான் றனது குலமுத லாய பிறைக்கொழுந்தே" (பாண்டிக்.)