36

பத்துப்பாட்டு

தெய்வத்தின் ஆணையால் தானே சிவந்திருத்தலின், தோயாத்துகிலென்றார்.

16. பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் - பலமணிகள் கோத்த ஏழுவடமாகிய 1மேகலையையணிந்த அல்குலினையும்,

அஃது, 2"எண்கோவை காஞ்சி யெழுகோவை மேகலை - பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள், பருமம் பதினெட்டு முப்பத்திரண்டு, விரிசிகை யென்றுணரற் பாற்று" 3என்பதனாலுணர்க.

17. கை புனைந்து இயற்றா கவின் பெறு 4வனப்பின் - ஒருவர் கையாற் சிறப்பித்துப் பிறப்பியாத அழகைத் தமக்கு இயல்பாகப் பெறுகின்ற அழகினையும், 

என்றது : மானிடமகளிர்க்குத் 5தாயர் பலரும் கைசெய்து பிறப்பிக்கும் அழகன்றி இவர் தெய்வத்தன்மையான் இயல்பாகப் பெற்ற அழகினையுடைய ரென்றவாறு. 

18. 6நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை -7சாம்பூ நதமென்று நாவலோடடுத்துப் பெயர்பெற்ற பொன்னால் நிருமித்து விளங்குகின்ற பூணினையும்,

பொலம் : "பொன்னென் கிளவி" (தொல். புள்ளி மயங்கியல், சூ. 61) என்பதனான் முடிக்க.

19. சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி - சேய்நிலத்தைக் கடந்து விளங்குகின்ற குற்றந்தீர்ந்த நிறத்தினையுமுடைய சூரர மகளிர் (41) என்க. 


1"பல்காழ்" (பொருந. 39) என்பதற்கும் மேகலையென்றே பொருளெழுதுவர்.

2"எண்கோவை மேகலை காஞ்சி யிருகோவை, பண்கொள் கலாபமிரு பத்தொன்று - கண்கொள், பருமம் பதினான்கு முப்பத் திரண்டு, விரிசிகை யென்றுணரற் பாற்று" எனவும் பாடம்.

3 இந்தச் செய்யுளின் பொருண்முறை திவாகரம், பிங்கலம், சூடாமணி என்பவற்றிலும், இதன் பாடபேதச்செய்யுளின் பொருண் முறை "எண்ணிரண்டிரட்டி" (திருவிளை. திருமண. 158) என்னும் செய்யுளிலும் காணப்படுகின்றன.

4 வனப்பு - இளமைநிறம் (வேறுரை)

5ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடிபயிற்றுவாள், கைத்தாயெனத் தாயர் ஐவராதலின், ‘தாயர் பலரும்' என்றார் (சீவக. 363, ந.) இவரை, "அடியோர் பாங்கு" என்பர்;சிலப். 16 : 85, அடியார்.

6 நாவற்பழத்துச் சாறுபட்டுப் பேதமான பொன்னால் (வேறுரை)

7"பொன்னுக்குச் சாம்புநதம்" (திருவள்ளுவ. 36)