ஆனா இனம் (214) பாணர் (219)-அவ்விரண்டிலும் விருப்பமையரத திரட்சியையுடைய பாணரென்க. தின்று (214) உண்டு (213) ஆனா இனப் (214) பாணர் (219) என்க. வைகல் (214)-நாடோறும், நிலன் எடுக்கல்லா ஒள் பல் வெறுக்கை (215)-நிலஞ்சுமக்கமாட்டாத ஒள்ளிய பலவாகிய பொருட்டிரள்களையும், என்றது பூண்களையும் பொன்னையும் பயன் அறவு அறியா நகர் (216)-எக்காலமும் பயன்கெடுதலறியாத நகர். 217-8. நரம்பின் முரலும் நயம் வரும் முரற்சி விறலியர் வறுகை குறு தொடி செறிப்ப-யாழ்வாசித்தாற்போலப் பாடும் நயப்பாடுதோன்றும் 1பாட்டினையுடைய விறல்பட ஆடுதலையுடையார் தம்முடைய பூணணியாத கைகளிலே குறிய தொடிகளையிட, "நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று நைந்தார்" (சீவக. 658) என்றார் பிறரும். 219. பாணர் உவப்ப களிறு பல தரீஇ-பாணர்மகிழும்படி யானைகள் பலவற்றையுங்கொடுத்து, நகரிலே யிருந்து (216) நாடோறும் (214) விறலியர் தொடிசெறியா நிற்பப் (218) பாணருவப்ப (219) வெறுக்கையையும் (215) யானையையுங் கொடுத்தென்க. ‘தரீஇ' என்றதனை, "செலவினும் வரவினும்" (தொல். கிளவி. சூ. 28) என்னும் பொதுச் சூத்திரத்தாற் கொள்க. 220. கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ-தம்முடன் நட்புக் கொண்டோர் மனமகிழும்படி, அழித்த அரண்களிற்கொண்ட பல பொருள்களையும் அவர்க்குச் செலுத்திக்கொடுத்து, என்றது, அவர் 2வேண்டாவென்று மறுக்கவும் தாம் வலியப் போக விட்டென்றவாறு. 221. மறம் கலங்க தலை சென்று-பகைவர்மறம் நிலைகுலையும்படி அவர்களிடத்தே சென்று, 222. வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி-அவர்க்கு வாட்போரிலே வருந்தினபடியாலே அவ்வருத்தத்தினாற் பின்பும் அதன்கட் பிறக்கின்ற முயற்சியை வாழ்த்தி, என்றது, 3வாட்போரின்கட்பெற்ற இனிமையைப் பின்னும்விரும்பி அதிலே முயல்கின்றாரென வீரச்சிறப்புக் கூறிற்றாம்,
1 "பாடனல் விறலியர்" (பரி. 17:15) 2 "கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று" (புறநா. 204:4) 3 முல்லை. 67-ஆம் அடியின் குறிப்புரையைப் பார்க்க.
|