362

‘விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள், வைக்குந்தன் னாளையெடுத்து" (குறள், 776) என்றார் பிறரும்.

உழந்தென்னுஞ் செய்தெனச்சம் காரணப்பொருட்டு, உழந்த தன்னெனப் பெயரெச்சமாயின், தன்னென்னுமொருமை மேல்வருகின்ற மன்னர் (234) என்னும் பன்மைக்காகாமையுணர்க.

223-4. நாள் ஈண்டிய நல் அகவர்க்கு தேரோடு மா சிதறி-விடியற்காலத்தே வந்து திரண்ட அரசர்விரும்பப்பட்ட சூதர்க்குத் தேருடனே குதிரைகளையும் பலவாகக் கொடுத்து,

என்றது, "தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச், சூத ரேத்திய துயிலெடை நிலையும்" (தொல். புறத். சூ. 36) என்னும்விதியாற் சூதர் இருசுடர்தொடங்கி இன்று காறும் வருகின்ற தம் குலத்துள்ளோர் புகழை அரசர் கேட்டற்கு விரும்புவரென்று கருதி விடியற்காலத்தே பாசறைக் கண்வந்து துயிலெடை பாடுவரென்பது ஈண்டுக் கூறிற்றாம்.

அகவரென்றார், குலத்தோரெல்லாரையும் அழைத்துப் புகழ்வரென்பதுபற்றி ; ஆகுபெயர், 1"அகவல்" போல.

இனி வைகறைபாடும் பாணரென்பாருமுளர்.

வாழ்த்தித் திரண்ட அகவரென்க.

225-8. [சூடுற்ற சுடர்ப்பூவின், பாடுபுலர்ந்த நறுஞ்சாந்தின், விழுமிய பெரியோர் சுற்ற மாகக், கள்ளி னிரும்பைக் கலஞ்செல வுண்டு :] கள்ளின் இரு பைக்கலம் செல உண்டு சூடு உற்ற சுடர் பூவின் பாடு புலர்த்த நறு சாந்தின் விழுமிய பெரியோர் சுற்றம் ஆக-கள்ளினையுடையவாகிய பெருமையினையுடைய பச்சைக்குப்பிகள் வற்றும்படியாகக் 2கள்ளினையுண்டு சூடுதலுற்ற விளக்கத்தையுடைத்தாகிய வஞ்சியினையும் பூசினபடியே புலர்ந்த நறிய சந்தனத்தினையுமுடைய சீரிய படைத்தலைவரைத் தமக்குச் சுற்றத்தாராகக்கொண்டு,

உண்டென்னுஞ் செய்தெனெச்சம் உடையவென்னும் வினைக்குறிப்போடு முடிந்தது.

229. பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப-தம்மை வழிபட்டோருடைய தேசங்கள் தம் ஏவலைக்கேட்டு நடக்கையினாலே,

230. பணியார் தேஎம் பணித்து திறை கொண்மார்-தம்மை வழி படாதோருடைய தேசங்களைத் தம் ஏவல் கேட்கும்படி பண்ணி அவர்களைத் திறை வாங்குதற்கு,


1 "அகவிக்கூறலின் அகவலாயிற்று ............................. அதனை வழக்கினுள் அழைத்தலென்ப" (தொல். செய். சூ. 81, .)

2 கள்ளுணல் இங்கே வீரபானம் ; சீவக. 1874, ந. பார்க்க.