238-44. [குணகடல் கொண்டு குடகடன் முற்றி, யிரவு மெல்லையும் விளிவிட னறியா, தவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக் கவலையங் குழும்பி னருவி யொலிப்பக், கழைவளர் சாரற் களிற்றின நடுங்க, வரைமுத லிரங்கு மேறொடு வான்ஞெமிர்ந்து, சிதரற் பெரும்பெயல் சிறத்தலின் :] வான் (243) குணகடல் கொண்டு 1குடகடல் (238) வரைமுதல் (243) முற்றி (238) மேகம் கீழ்த்திசைக் கடலிடத்தே நீரைமுகந்து மேற்றிசைக் கடலருகின் மலையிடத்தே தங்கி, இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது (239)-இரவும் பகலும் ஒழிந்த இடத்தை அறியாது, அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டு (240) கவலை அம் 2குழும் பின் அருவி ஒலிப்ப (241)-பள்ளமும் மேடுமாகிய பலநிலத்துண்டாகிய நீரினாலே திரண்டு சேரக்குவிந்து கவலைக்கிழங்கு கல்லின அழகிய குழியிலே வீழ்ந்து அருவியொலிக்கும்படி, கழை வளர் சாரல் களிறு இனம் நடுங்க (242) இரங்கும் ஏறொடுஞெமிர்ந்து (243)-மூங்கில் வளர்ந்த மலைப்பக்கத்திலே யானைத்திரள் நடுங்கும்படி ஒலிக்கும் உருமேற்றோடே பரந்து, சிதரல் பெரு பெயல் (244)-சிதறுதலையுடைய பெருமழை, சிறத்தலின் (244)-மிகுகையினாலே, வான் (243) முற்றி (238) ஞெமிர்ந்து (243) அருவியொலிக்கும்படி (241) பெரும்பெயல் (244) விளிவிடனறியாது (239) சிறத்தலின் (244) என முடிக்க. 244-6. [தாங்காது, குணகடற் கிவர்தருங் குரூஉப்புன லுந்தி, நிவந்துசெ னீத்தங் குளங்கொளச் சாற்றி :] தாங்காது உந்தி நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி குணகடற்கு இவர்தரும் குரூஉ புனல்-யாறுகள் தாங்காமல் யாற்றிடைக்குறையிலே ஓங்கிச்செல்கின்ற பெருக்கைக் குளங்கள் கொள்ளும்படி நிறைத்துக் கீழ்த்திசைக் கடலுக்குப் பரந்துசெல்லும் நிறத்தையுடைய நீராலே, 247. களிறு மாய்க்கும் கதிர் கழனி-யானைகள் நின்றால் அவற்றை மறைக்கும்படி விளைந்த கதிரையுடைய கழனியிலும், 248. ஒளிறு இலஞ்சி-விளங்கும் மடுக்களினும், 248-9. அடை நிவந்த முள் தாள சுடர் தாமரை-இலைக்கு மேலான, முள்ளையுடையதாள்களையுடையவாகிய ஒளியினையுடைய தாமரைப்பூவினையும்,
1 "மேன்மலைமுற்றி" (பரி. 12:2) ; "பெருமலை மீமிசை முற்றின" (அகநா. 278:6) 2 குழும்பு-குழி ; மதுரைக். 273, ந.
|