365

250. கள் கமழும் நறு நெய்தல்-தேன் நாறும் நறிய நெய்தற் பூவினையும்,

251. வள் இதழ் அவிழ் நிலம்-1பெருமையையுடைய இதழ் விரிந்த நீலப்பூவினையும்,

252. மெல் இலை அரி ஆம்பலொடு-மெல்லிய இலையினையும் வண்டுகளையுமுடைய ஆம்பற்பூவோடே,

அரி-மென்மையுமாம்.

253. வண்டு இறை கொண்ட கமழ் பூ பொய்கை - வண்டுகள் தங்குதல் கொண்ட மணநாறும் பிற பூக்களையுமுடைய பொய்கைகளிலும்,

254-5. கம்புள் சேவல் இன் துயில் இரிய வள்ளை நீக்கி 2வயமீன் முகந்து-கம்புட்கோழி இனிய உறக்கங்கெடும்படி வள்ளைக் கொடிகளைத் தள்ளி வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு,

256. கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர்-விலைகூறிவிற்ற கொடிய முடிகளையுடைய வலையால் மீன்பிடிப்பார்,

கழனியிலும் (247) இலஞ்சியிலும் (248) பொய்கைகளிலும் (253) மீன்முகந்து (255) சாற்றிய வலைஞரென்க.

257. வேழம் பழனத்து நூழிலாட்டு ஓதை (258)-கொறுக்கைச்சியையுடைய மருதநிலத்து மீனைக் கொன்று குவித்தலாற் பிறந்த ஓசை.

258. கரும்பின் எந்திரம் ஓதை-கரும்பிற்கு இட்ட ஆலையிடத்து ஓசை,

கட்பின் ஓதை-களைபறிப்பிடத்து ஓசை,

259-60. அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே-மூத்தலான் அள்ளலிலே வயிற்றுத்தங்கிய எருதுற்ற வருத்தத்தைக் கள்ளையுண்ணுங்களமர் பெயர்க்கும் ஆரவாரம்,

261-2. ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வல் கை வினைஞர் அரிபறை-தழைத்த பகன்றையினையுடைய நெல்லுமுற்றிய கழனியில் அந்நெல்லை வலிய கையினாலே அறுப்பாருடைய அரித்தெழுகின்ற பறையோசை,


1 பெருமையையுடைய நீலம் : நெய்தல் நீலம் என்னும் இருவகை மலர்களுள் நீலம் சிறப்படையதாகலின் இவ்வாறு உரையெழுதினார் ; "பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்கும்" (ஐங். 2-4) என்பதன் விசேட வுரையிலே அதன் உரையாசிரியர், ‘சிறப்புடைய கருங்குவளையுடனே சிறப்பில்லாத நெய்தல் நிகர்க்கு மூரனென்றது ................ ' என்றெழுதியிருத்தல் இதனை வலியுறுத்தும்.

2 "வய வலியாகும்" (தொல். உரி. சூ. 68)