394

491. ஞெமன் கோல் அன்ன செம்மைத்தாகி-துலாக்கோலையொத்த1நடுவுநிலைமையையுடைத்தாய்,

492. சிறந்த கொள்கை 2அறம் கூறு அவையமும்-இக்குணங்களாற் சிறந்த விரதங்களையுடைய தருமநூலைச் சொல்லுந்திரளும்,

493. நறு சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து பெரியோர் (495)-நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினயுடைய பெரியோர்,

யாகத்திற்குச் சந்தனம்பூசுதல் மரபு.

494-8. [ஆவுதி மண்ணி யவிர்துகின் முடித்து, மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல, நன்றுந் தீதுங் கண்டாய்ந் தடக்கி, யன்பு மறனு மொழியாது காத்துப், பழியொரீஇ யுயர்ந்து பாய்புகழ் நிறைந்த :]

ஆவுதி மண்ணி (494) மா விசும்பு வழங்கும் பெரியோர் போல(495)-3யாகங்களைப் பண்ணிப பெரிய சுவர்க்கத்து ஏறப்போம் அந்தணர் அரசனை அடக்குமாறு போல,

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி (496)-அரசனிடத்துள்ள நன்மையும் தீமையும் நெஞ்சத்தாலேகண்டு அத்தீங்குகளையாராய்ந்து அவற்றிலே ஒழுகாமலடக்கி,

அன்பும் அறனும் ஒழியாது காத்து (497)-சுற்றத்திடத்துச் செல்லும் அன்பும்எவ்வுயிர்க்கண்ணும் நிகழும் தருமமும் ஒருகாலமும்போகாமல் தம்மிடத்தே பரிகரித்து,

பழி ஒரீஇ உயர்ந்த (498)-பழி தம்மிடத்துவாராமல் நீக்கி அதனானே ஏனையோரினும் உயர்ச்சியெய்தி,

பாய் புகழ் நிறைந்த (498)-பரந்த புகழ்நிறைந்த,


1 "நடுவுநிலையென்பது ஒன்பது சுவையுள் ஒன்றெனநாடாக நிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை ; அஃதாவது, ‘செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினும், நெஞ்சோர்ந் தோடா நிலைமை' ; அது காம வெகுளி மயக்கம் நீங்கினோர் கண்ணே நிகழ்வது" (தொல். மெய்ப். 12, பேர்)

2 "அறங்கூறவையம்-தருமநூன் முறைமையின் அறங்கூறும் தருமாசனத்தார்"(சிலப். 5:135, அடியார். )

3 யாகஞ்செய்து சுவர்க்கம்புகுதல், "பாடிப் பெற்ற பரிசில் : "நீர் வேண்டியது கொண்மின்' என ‘யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியிற் பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணாராயினர்" (பதிற், மூன்றாம்பத்தின் இறுதிவாக்கியம்) என்பதிற் குறிப்பிடப்பட்ட பாலைக்கௌதமனார் சரிதையாலும் உணரப்படும்.