396

508. பழையன் மோகூர்-பழையனென்னும் குறுநிலமன்னனுடைய மோகூரிடத்து,

508-9. [அவையகம் விளங்க, நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன :] அவை அகம் விளங்க நாற்கோசர் மொழி தோன்றி அன்ன-நன்மக்கள் திரளிடத்தே விளங்கும்படி அறியக்கூறிய நான்குவகையாகிய கோசர் வஞ்சினமொழியாலே விளங்கினாற்போன்ற,

510. தாம் மேஎந்தோன்றிய நால் பெரு குழுவும்-தமது மொழியால் தாம் மேலாய்விளங்கிய நால்வகைப்பட்ட பெரிய திரளும்,

ஐம்பெருங்குழுவில் அமைச்சரைப்பிரித்து முற்கூறினமையின், ஈண்டு ஏனை நாற்பெருங்குழுவையுங்கூறினார். ஐம்பெருங்குழுவாவன: "அமைச்சர் புரோகிதர் சேனா பதியர், தூத ரொற்ற ரிவரென மொழிபே"; இளங்கோவடிகளும்,1"ஐம்பெருங் குழுவு மெண்பே ராயமும்" என்றார்.

511. [கோடுபோழ் கடைநரும் :] போழ் கோடு கடைநரும்-2அறுத்த சங்கை வளை முதலியனவாகக் கடைவாரும்,

திருமணி குயினரும்-அழகிய மணிகளைத் துளையிடுவாரும்,

512. சூடு உறு நல் பொன் சுடர் இழை புனைநரும்-சுடுதலுற்ற நன்றாகிய பொன்னை விளங்கும் பணிகளாகப்பண்ணுந் தட்டாரும்,

513. பொன் உரை காண்மரும்-3பொன்னையுரைத்தவுரையை அறுதியிடும்
பொன்வாணிகரும்,

கலிங்கம் பகர்நரும்-புடைவைகளை விற்பாரும்,

514. செம்பு நிறை கொண்மரும்-செம்பு நிறுக்கப்பட்டதனை வாங்கிக் கொள்வோரும்,

வம்பு நிறை முடிநரும்-கச்சுக்களைத் தம் தொழின்முற்றுப்பட முடிவாரும்,

515. பூவும் புகையும் ஆயும் மாக்களும்-பூக்களையும் 4சாந்தையும் நன்றாக ஆராய்ந்து விற்பாரும்,


1 சிலப்பதிகாரம், 5:157. 2 மதுரைக் 316, பார்க்க.

3 "பொலந்தெரி மாக்கள்" (சிலப். 14:203) என்பதன் உரையில், ‘பொற்பேதத்தைப் பகுத்தறியும் பொன்வாணிகர்' (அடியார்.) என்று எழுதியிருத்தல் பொன்வாணிகர் இயல்பை விளக்கும்.

4 சாந்து-சந்தனக்கட்டை ; புகை என்ற மூலத்திற்குப் புகைக்கப்படும் உறுப்பாகிய சாந்தென்று இவ்வுரையாசிரியர் பொருள் கொண்டவாறே, "பூவும் புகையும்" (சிலப். 5:14) என்ற விடத்துப் புகையென்பதற்கு, "மயிருக்குப் புகைக்கும் அகில் முதலாயின" (அரும்பத.), ‘புகையுறுப்பு' (அடியார்.) என்று பிறரும் பொருள் கூறுதல் இங்கே அறியத்தக்கது.