516-7. [எவ்வகைச் செய்தியு முவமங் காட்டி, நுண்ணிதினுணர்ந்த :] எ வகை நுண்ணிதின் உணர்ந்த செய்தியும் உவமம் காட்டி-பலவகைப்பட்ட கூரிதாகவுணர்ந்த தொழில்களையும் ஒப்புக் காட்டி, சித்திரமெழுதுவார்க்கு வடிவின்றொழில்கள் தோன்ற எழுதுதற்கரிதென்பதுபற்றிச் செய்தியுமென்றார். 517-8. 1நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும்-கூரிய அறிவினையுடைய சித்திரகாரிகளும், நோக்கினார்கண்ணிடத்தே தம் தொழிலைநிறுத்தலிற் கண்ணுள் வினைஞரென்றார். பிறரும் கூடி-யான் கூறப்படாதோரும் திரண்டு, 519-20. தெள் திரை அவிர் அறல் கடுப்ப ஒள் பல் குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து-தெளிந்த திரையில் விளங்குகின்ற அறலையொப்ப ஒள்ளிய பலவாகிய சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டு வந்து விரித்து, மடித்தது அறலுக்குவமை. 521. சிறியரும் பெரியரும் 2கம்மியர் குழீஇ-சிறியோரும் பெரியோருமாகிய நெய்தற்றொழிலைச் செய்வார் திரண்டு, 522. நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர-நான்காய் வேறுபட்ட தெருவுகடோறும்3ஒருவர்காலோடு ஒருவர்கால் நெருங்க நிற்றலைச்செய்ய, கம்மியர் (521) விரித்துக் (520) குழீஇ (521) நிற்றலைச்செய்ய, இஃது அந்திக்கடையில் தெருவிற் புடைவைவிற்பாரைக் கூறிற்று. கோயிலைச்சூழ்ந்த ஆடவர்தெரு நான்காதலின்,4நால்வேறு தெருவென்றார். இனிப் பொன்னும் மணியும் புடைவைகளும் 5கருஞ்சரக்கும் விற்கும் நால்வகைப்பட்டவணிகர்தெருவென்றுமாம்.
1 "நுழைபுலம்-பல நூல்களினுஞ்சென்ற அறிவு" (குறள், 407, பரிமேல்.) என்பதை ஆராய்க. 2 கம்மியர் : கர்மியர் என்பதன் சிதைவென்பர் ; தொழில் செய்வோரென்பது அதன் பொருள். 3 "தாளொடு தாண்முட்ட ................... நீளொளி மணிவீதி நிரந்தரித் தனசனமே" (விநாயக. நகரப். 95) 4 "நால் வேறு தெருவும்-அந்தணர் அரசர் வணிகர் வேளாளரெனச் சொல்லப்பட்டாரிருக்கும் நான்காய் வேறுபட்ட தெருக்களும்" (சிலப். 14:212, அடியார்.) என்பர். 5 கருஞ்சரக்கு-கூலங்கள்; சிலப். 5:23, அரும்பத.
|