46

பத்துப்பாட்டு

85. மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப - மின்னோடே மாறுபடுகின்ற விளக்கத்தோடே முடியிலே பொலிவுபெற,

86. நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங்குழை -ஒளி தங்கி அசையும் தொழிற்கூறமைந்த பொன்னாற்செய்தமகரக்குழை,

87-8. சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ அகலாமீனீன் அவிர்வன இமைப்ப - சேய்நிலத்தே சென்று விளங்கும் இயல்பினையுடைய ஒளியையுடைய மதியைச் சூழ்ந்து நீங்காத மீன்கள்போல விளங்குவனவாய் ஒளியைக்கால,

மீன் - உரோகிணி முதலியன ; வியாழமும் வெள்ளியுமாம்.

89.தா இல் கொள்கை தம் தொழில் முடிமார் - வருத்தமில்லாத
விரதங்களையுடைய தவத்தொழிலை முடிப்பாருடைய,

90. மனன் நேர்பு எழுதரு 1வாள் நிறம் முகன் - மனத்திலே
பொருந்தித் தோன்றுகின்ற ஒளியையுடைய நிறத்தையுடைய முகங்களிலே,

பொற்ப (85) இமைப்ப (88) எழுதருமுகனென்க.

முகனென்றது ஆறற்கும் பொது.

91 - 2. [மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப், பல்கதிர் விரிந்தன் றொருமுகம்:] ஒருமுகம் மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க பல்கதிர் விரிந்தன்று-ஒருமுகம் பெருமையையுடைத்தாகிய இருட்சியையுடைய உலகம் குற்றமின்றாய் விளங்கும்படி பலகிரணங்களையும் தோற்று வித்தது;

ஒரு முகமென்று முன்னே கூட்டிப் பொருள் கொள்க.

92-4. ஒருமுகம் 2ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி காதலின் உவந்து வரம் கொடுத்தன்று - ஒருமுகம் தன்மேல் அன்புசெய்தவர்கள் துதிக்க அதற்குப் பொருந்தி அவர்க்கு இனிதாக நடந்து அவர் மேற் சென்ற காதலாலே மகிழ்ந்து வேண்டும் பொருள்களை முடித்துக் கொடுத்தது;

94 - 6. ஒருமுகம் மந்திர விதியின் 3மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்கும் - ஒருமுகம் மந்திரத்தையுடைய வேதத்திற்கூறிய முறைமையிடத்துத் தப்பாத அந்தணருடைய யாகங்களில் தீங்கு வராத படி நினையாநிற்கும் ;


1.ஒளி விடுகின்ற ஆறுதிருமுகங்களை யுடையவன்; அந்தத்திருமுகங்களினுடைய படிவஞ்சொல்லின் (வேறுரை)

2.ஏழையர் இரந்து துதிக்க (வேறுரை)

3.மரபுளி : உளி, மூன்றாவதன் பொருள்படுவதோரிடைச் சொல். அந்தணர் - அழகிய தட்பத்தினையுடையார். ஓர்க்கும் - திருவுள்ளத்து அடைக்கும் (வேறுரை)