விழுமஞ்செய்வனவற்றை விழுமமென்றார் ; இஃது ஆகுபெயர்.
அவர் (260) குழு மலை விடர் அகம் உடைய ஆல் என (261) - தலைவருடைய கிளையை யுடைத்தாகிய மலையின்முழைஞ்சிடம் உடையவாயிருக்குமென்று.
அன்னாய் வாழி ; அன்னாய் யான் கூறுகின்றதனை விரும்புவாயாக (1) ; நீயும் எய்யா மையலையாகி வருந்துதி (8) ; இவளும் (26) ஏனையுல கத்தும் இயைவதாலெனக்கூறி (24) மெலியும் (26) ; யானும் (29) சான்றோர்போல (28) வருந்தாநின்றேன் (29) ; எண்ணாது (31) எமியேம் துணிந்த அருவினை (32) நிகழ்ந்தவண்ணம் நீயுணரச் (33) செப்புதலை யமைந்தேன் ; அதுகேட்கச் சினவாதீமோ (34) ; தினையிற் படுபுள்ளோப்பி (38) வருதியரென நீ போகவிடுகையினாலே (39) யாங்களும் போய் இதணமேறிக் (41) கிளிகடிமரபினவற்றைவாங்கி (44) ஒட்டிக் (101) கொண்மூப் (50) பொழிந்தென (53) நெடுங்கோட்டிழிதருந் தெண்ணீ (54) ரருவி (55) யாடிப் (56) பாய்சுனைகுடைவுழிப் (57) பாயம் பாடிக் (58) கூந்தலைப்பிழிவனந்துவரிச் (60) சிவந்தகண்ணேமாய் (61) மலிவனமறுகிப் (97) பரேரம்புழகுடனே (96) காந்தள் முதலியவற்றையும் பிறவற்றையும் (62 - 95) பாறையிலே குவித்துத் (98) தெள்விளி பயிற்றி (100) ஒப்பியும் (101) தழைதைஇ உடுத்துக் (102) கோதையை (103) முச்சியிலே கட்டிச் (104) செயலைத் (105) தண்ணிழலிலே யிருந் தனமாக (106), குன்றுகெழுநாடனாகிய எம்பெருவிறல் (199) அணி பெற வந்து (136) இளையீர், இறந்த (141) கெடுதியுமுடையேனென்றனன் ; அதனெதிர் (142) சொல்லேமாதலிற் கலங்கி (143) மெல்லியலீர், சொல்லலும்பழியோவெனச்சொல்லி (145) ஓச்சி (150) அவித்துச் (151) சொல்லற் பாணிநின்றனனாக (152), வேழம் எதிர் தருகையினாலே (165) விரைந்தவற்பொருந்தி (168) நடுங்காநிற்கப் (169) பகழியைவாங்கி (170) அணி முகத்தழுத்தலின் (171), அது புறங்கொடுத்தபின் (174) கலுழிபாய்தலின் (178) வாழையினடுங்கினமாக, அதுகண்டு பெருந்தகை (179) எடுத்து அஞ்சலோம்பெனச் சொல்லி (181) நீவி நினைந்து (182) என் முகநோக்கி நக்கனன் (183) ; அவ்வழி நாணும் உட்கும் அடை தருகையினாலே (184) இவள் நீங்கவும் விடானாய் (185) அந்நிலை (183) முயங்கலின், அவ்வழி (186) இவளுள்ளத்தன்மை உள்ளினனாய் அதனையுட்கொண்டு (200) விருந்துண்டெஞ்சிய மிச்சிலை (206) நீ இடுகையினாலே யானுண்டலும் புரைவதென்று சொல்லித் (207) தேற்றிப் (208) பெருந்தகை (206) கடவுளும் வாழ்த்திக் கைதொழுது (209) வஞ்சினம் வாய்மையிற் றேற்றித் (210) தெண்ணீர்குடித்தலின் நெஞ்சமர்ந்து (211) சோலையிலே (214) களிறுதருபுணர்ச்சியைக் (212) கழிப்பி (214) மண்டிலம் மறைகையினாலே (216) மாலைதுன்னுதல்கண்டு (230) இலங்கிழையீர், கலங்கலோம்புமினென (233) ஈரநன்மொழி கூறி (234) எம்மொடு வந்து (235) உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன் ; அதற்கொண்டு