பத்துப்பாட்டு 1கோபத்தின் பின்னாகச் சிறிது பொழுது நிற்பது சினம். 135-6. இடும்பை யாவதும் அறியா இயல்பினர் -2தவத்தான் மெய்வருத்தம் உளவேனும் மனத்தான் வருத்தம் சிறிதுமறியப்படாத இயல்பினையுடையர், மே வர - திருவுள்ளம் பொருந்துதல் வர, 137. 3துனி இல் காட்சி முனிவர் முன் புக - ஒருவருடனும் வெறுப்பில்லாத நல்ல அறிவினையுடைய முனிவர் முன்னே செல்ல, உடுக்கையர் (126) முடியினர் (127) உருவினர் (128) யாக்கையர் (130) உண்டியர் (131) மனத்தினர் (132) அறிவினர் (133) தலைமையர் (134) காட்சியர் (135) இயல்பினராகிய (136) முனிவர் (137) மேவர (136) முற்புக (137) வென முடிக்க. 138. புகைமுகந்தன்ன என்பதுமுதல் மேவலர் (142) என்னுந் துணையும் பாடுவாரைக் கூறிற்று. 4புகை முகந்தன்ன மாசு இல் தூ உடை - புகையை முகந்தாலொத்த; தெய்வத்தன்மையால் அழுக்கேறாத தூய உடையினையும், 139. 5முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து - முகை வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும், கட்டுதலிற் றகையென்றார், மாலையை; ஆகுபெயர். 140 - 41. செவி நேர்பு வைத்த செய்வு உறு திவவின் நல் யாழ் நவின்ற -6எஃகுச் செவியாலே சுருதியையளந்து நரம்பைக் கட்டின சுற்றுதலுறும் வார்க்கட்டினையுடைய நன்றாகிய யாழின் இசையிலே பயின்ற, 141 - 2. நயன் உடை நெஞ்சின் 7மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர - ஈரமுடைய நெஞ்சாலே எக்காலமும் மெல்லிய வார்த்தை சொல்லுதலைப் பொருந்திய கந்தருவர் இனிய நரம்பை வாசிக்க, நவின்ற நயனென்க.
1 "கோபம் நீட்டித்து நிற்கின்றது சினம்" என்பர் பின்; சிறுபாண். 210, உரை, 2 "இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக், கையாறாக் கொள்ளாதா மேல்" (குறள். 627).3 துயரமில்லாத தோற்றம் (வேறுரை) 4 புகையைக் கையாலே முகந்தாற் போன்று நொய்யவாய (வேறுரை) 5 மொட்டுப்பூக் கிண்கிணிவாய்க் கொண்ட பக்குவத்திலே கட்டின மாலை சூழ்ந்த மார்பினையும் (வேறுரை) 6 எஃகுச் செவி - மூவகைச் செவியிலும் தலையான கூரிய செவி; "எஃகுநுண் செவிகள் வீழ" (சீவக. 2718) ; "எஃகுச் செவித் தேவர்கள்" (தக்க. 610, உரை) 7 மெத்தென்ற சொற்சேர்ந்தோராகிய வித்தியாதரர் (வேறுரை)
|