1 - திருமுருகாற்றுப்படை 170 - 80. [ அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண், டாறினிற் கழிப்பிய:] அறுநான்கு இரட்டி ஆண்டு நல்லிளமை ஆறினில் கழிப்பிய - இருபத்து நான்கின் இரட்டியாகிய நாற்பத்தெட்டியாண்டு நல்லிளமையை வேதங்கூறிய நெறியிலே போக்கிய இருபிறப்பாளர் (182), இவர் 1பிரமசரியங்காத்த அந்தணர். அறன் நவில் கொள்கை - அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும், 181. மூன்று வகை குறித்த 2முத்தீ செல்வத்து - நாற்சதுரமும் முச்ச துரமும் வில்வடிவுமாகிய3மூன்று வகையைக் கருதின ஆகவனீயம் தக்கிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்று தீயானுண்டாகிய செல்வத்தினையுமுடைய, 182. இருபிறப்பாளர் - உபநயனத்துக்கு முன்பு ஒரு பிறப்பும் பின்பு ஒரு பிறப்புமாகிய இருபிறப்பினையுமுடைய அந்தணர், 4பொழுது அறிந்து நுவல - தாங்கள் வழிபடுங்காலமறிந்து தோத்திரங்களைக் கூற, 183. ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் - முந்நூல் கொண்டு முப்புரியாக்குதலின், ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட ஒரு புரி மூன்றாகிய நுண்ணிய பூணுநூலையும், ஞாணினையும் (183) கொள்கையினையும் (180) செல்வத்தினையுமுடைய (181) இருபிறப்பாளர் (182) என்க. 184. புலரா காழகம் புலர உடீஇ - நீராடுங்கால் தோய்க்கப்பட்ட கலிங்கம் உடம்பிலே கிடந்து புலர உடுத்து, என்றது, ஈரத்துடனேயிருந்து வழிபடுதல் கூறிற்று. 185. உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து - தலைமேலே வைத்த கையினையுடையராய்த் தன்னைத் துதித்து,
1."நாற்பத்தெட்டியான்டு பிரமசரியங்காத்தான்" (தொல். களவு. சூ. 1, உரை : இறை. சூ, 1 உரை) 2. முத்தீ : மூன்றாவன ஒன்று வேதத்தை வழங்கவும் ஒன்று தேவர்கட்குத் தட்சிணை கொடுக்கவும் ஒன்று பூலோகத்தை ரட்சை பண்ணவும் இவ்வாறாய முத்தீ (வேறுரை) 3.இவற்றுட் பின்னைய இரண்டன் வகையும் இக்காலத்து வழங்குவனவற்றிற்கு வேறுபட்டிருத்தலின், இம்மூன்று வகையும் சாகாபேதமாக இருத்தல் வேண்டுமெனக் கூறுகின்றனர். 4. உதயகாலத்தும் மத்தியான்ன காலத்தும் அத்தமன காலத்தும் தாபனம் அநுட்டானம் பூசையாகிய மூன்று தொழிலையும் முயன்று செய்ய (வேறுரை)
|