460 - 62. ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ வளம் செய் விளைஞர் வல்சி நல்க - ஞெண்டுகள் ஆடித்திரியும் செய்க்கு அருகில் மேட்டுநிலத்தேயிட்ட மலையை யொத்த போர்களை அடியிலேவிழ அழித்துக் கடாவிட்டு வளப்பத்தை யுண்டாக்கும் உழவர் நெல்லை முகந்து தராநிற்க, 463. 1துளங்கு தசும்பு வாக்கிய பசு பொதி தேறல் - களிப்பு மிகுதியால் அசையும் மிடாவினின்றும் வார்த்த பசிய முளையாலாக்கின கட்டெளிவை, 464. [ இளங்கதிர் ஞாயிற்றுக் களங்கடொறும் பெறுகுவிர் :] ஞாயிறு இள கதிர் களங்கள் தொறும் பெறுகுவிர் - ஞாயிற்றினது இளைய கதிர்களெறிக்குங் காலத்திலே களங்கடொறும் பெறுகுவிர் ; வினைஞர் வல்சிநல்காநிற்கப் பழையர்மகளிர் விரைஇத் தேறல் நல்கா நிற்கப் பெறுகுவிர் என்க. 465 - 8. [ முள்ளரித் தியற்றிய வெள்ளரி வெண்சோறு, வண்டு படக் கமழுந் தேம்பாய் கண்ணித், திண்டேர் நன்னற்கு மயினி சான்மெனக், கண்டோர் மருள :] வண்டு பட கமழும் தேன் பாய் கண்ணி திண் தேர் நன்னற்கும் அயினி சான்மென கண்டோர் மருள - வண்டு படியும்படி நாறும் தேன் சொரிந்த கண்ணியினையும் திண்ணிய தேரினையுமுடைய நன்னனுக்கும் உணவாதற்கு அமையுமென்று கண்டோர்கள் மருளும்படி, முள் அரித்து இயற்றிய வெள் அரி வெள் சோறு - முள்ளைக் கழித்து ஆக்கின கொழுப்பால் வெள்ளிய நிறத்தையுடைய தடிகளையிட்ட வெள்ளிய சோற்றை, வெள்ளிய நிறத்தையுடைய தடிகளை வெள்ளரி யென்றார். ஆகுபெயராக்கி. மருள இயற்றிய வென்க. 468. கடும்புடன் அருந்தி - நின் சுற்றத்துடனேயுண்டு, 469 - 70. எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் மருதம் பண்ணி அசையினிர் கழிமின் - எருத்தையடிக்கின்ற உழவரோசையோடே கூடும்படி நல்லயாழை மருதத்தை வாசித்து இளைப்பாறிப் போவீர் ; இத்துணையும் நாடுபடு வல்சியும் (68) அசையுநற்புலமும் (67) சேரக் கூறினார்.
1 " தசும்புதுளங்கிருக்கை " (பதிற், 42 : 11) என்பதும் , ' தன் களிப்பு மிகுதியால் தன்னையுண்டார் உடல்போல அத்தசும்பு இருந்து ஆடும்படியான இருப்பு 'என்னும் அதனுரையும் இங்கே அறியற்பாலன.
|