1 - திருமுருகாற்றுப்படை 221. 1ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும் - தன்மேல் அன்புடையார் ஏத்துதலாலே தன் மனம் பொருந்துதல் வருகின்ற இடத்தினும், 222. வேலன் தைஇய வெறி அயர் களனும் - படிமத்தான் இழைத்த வெறியாடுகளத்தினும், பிள்ளையார் வேலைத் தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின், வேலனென்றார்; இது, "வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்" (தொல். புறத், சூ. 5) எனப் புறத்திற்கும் கூறியது. 223. காடும் காவும் கவின் பெறு துருத்தியும் - காட்டினும் பொழிலினும் அழகுபெறுகின்ற ஆற்றிடைக்குறையினும், 224. யாறும் குளனும் - ஆறுகளினும் குளங்களினும், வேறு பல் வைப்பும் - முற்கூறிய ஊர்களன்றி வேறுபட்ட பலவாகிய ஊர்களினும், 225. சதுக்கமும் - நாற்சந்தியினும், சந்தியும் - முச்சந்தியினும் 2ஐஞ்சந்தியினும், புது பூ கடம்பும் - புதிய பூக்களையுடைய கடம்பினும், 226. மன்றமும் - ஊர்க்குநடுவாய் எல்லாருமிருக்கும் மரத்தடியினும் ; 3பொதியிலும் - அம்பலத்தினும், 4கந்து உடை நிலையினும் - ஆதீண்டு குற்றியையுடைய இடத்தினும், 227. [ மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர :] மாண் தலை கொடியொடு உரு கெழு வியனகர் (244) அமைவர மண்ணி - மாட்சிமைப்பட்ட தலைமையினையுடைய கோழிக்கொடியோடே உருகெழு வியனரை அமைவரப் பண்ணி, ஒடு : வேறுவினையொடு. இனி, 5‘ஆண்டலைக்கொடி' என்று பாடமாயின், பேய்முதலியன
1. ஆர்வலர் - ஒன்றற்குறையுடையார் (வேறுரை) 2."சந்தி யைந்துந் தம்முடன் கூடி, வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்து" (சிலப். 10 : 19-20); "காளத்தி, வருமைஞ் சந்தி மழை மத யானையே" (சீகாளத்தி. காப்பு.) 3. பொதியமலை யென்பாருமுளர் (வேறுரை) 4. யானைத் தறியிடத்தினும்; பசுமுதலானவை உரிஞ்சுதறி யெனினுமமையும் (வேறுரை) 5. ஆண்டலைக் கொடி - மயிற்கொடி (வேறுரை)
|