1 - திருமுருகாற்றுப்படை முகனமர்ந்தென்றார், 1அவன் தெய்வத்தன்மையைக் கண்ட பொழுது அச்சம் பிறவாது நிற்க வேண்டுமென்றற்கு. 252. கை தொழூஉ பரவி - முன்னர்க் கையைத் தலைமேலே வைத்து வாழ்த்தி, கால் உற வணங்கி - பின்னர்த் திருவடி தலையிலேயுறும்படி தண்டனிட்டு, 253. நெடு பெரு சிமையத்து2 நீலம் பைஞ்சுனை - நெடிய பெரிய இமவானுச்சியில் தருப்பைவளர்ந்த பசிய சுனையிடத்தே, நீலமென்றார், அதினின்ற நீலநிறத்தையுடைய தருப்பையை, அஃது ஆகுபெயர்; என்றது சரவணப் பொய்கையென்றவாறு. 254. ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப - விசும்பும் வளியும் தீயும் நீரும் நிலனுமாகிய ஐவருள் தீ தன் அங்கையிலே ஏற்ப, 3சதாசிவனும் மயேச்சுரனும் உருத்திரனும் அரியும் அயனும் பூதங்கட்குத் தெய்வமாகலின், ஐவரென்றார்; ஐவருளொருவனென்றது உருத்திரன் தெய்வமாகிய தீயை. அவன் அங்கையேற்பவென்றது, இறைவனிடத்தினின்றும் இந்திரன் வாங்கிய கருப்பத்தினை முனிவர் வாங்கித் தமக்குத் தரிக்கலாகாமையின் இறைவன் கூறாகிய முத்தீக்குண்டத்திட்டதனைக் கூறிற்று. 255. அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ - அருந்ததியொழிந்த அறுவராலே பெறப்பட்ட ஆறுவடிவு பொருந்திய செல்வ, என்றது : 4அங்ஙனம் அங்கியின்கணிட்டுச் சத்தி குறைந்த கருப்பத்தை முனிவரெழுவரும் வாங்கித் தம் மனைவியர்க்குக் கொடுப்ப அருந்ததியொழிந்தார் விழுங்கிச் சூன்முதிர்ந்து, சரவணப் பொய்கையிற் பதுமப்பாயலிலே பெற ஆறுவடிவாக வளர்ந்தமை கூறிற்று. ஏற்கையினாலே (254) அறுவராற் பைஞ்சுனையிலே (253) பயக்கப் பட்ட செல்வ (255) வென்க; இது பரிபாடலில், "பாயிரும் பனிக்கடல்" (5) என்னும் பாட்டாணுணர்க.
1. "அணங்குசா லுயர்நிலை தழீஇ" (முருகு. 289) என்பது இக்கருத்தை வலியுறுத்தும். 2. நீலோற்பல முதலாகவுள்ள பூக்கள் மிடைந்து கிடக்கின்ற சரவணப் பொய்கையில் (வேறுரை) 3 "ஐவகைப் பூதத்திற்கு நாயகரான பிரமா விட்டுணுருத்திர ஈசுவர சதாசிவர்கள்" (தக்க. 138, உரை); "பாராதி யைந்துக்கும் பன்னுமதி தெய்வங்கள், ஆரா ரயனாதி தேவராம்" (உண்மைவிளக்கம், 8) 4 58-ஆம் அடியின் விசேடவுரையாலும் இது விளங்குகின்றது.
|