73

1 - திருமுருகாற்றுப்படை

புலவன் - அறிவுடையவன்,

262. செருவில் ஒருவ - போர்த்தொழிலில் ஒருவனாகி நிற்பாய்,1பொரு விறல் மள்ள - பொருகின்ற வெற்றியினையுடைய மள்ள, மள்ளன் - இளமைப்பருவத்தோன்.

263. 2அந்தணர் வெறுக்கை -அந்தணருடைய செல்வமாயிருப்பாய், அறிந்தோர் 3சொல் மலை - சான்றோர் புகழ்ந்து சொல்லப்படும் சொற்களின் ஈட்டமாயிருப்பாய்,

264. மங்கையர் கணவ - தெய்வயானையாரும் வள்ளிநாய்ச்சி யாருமாகிய மகளிர்க்குக் கணவ,

மைந்தர் ஏறே - வீரர்க்கு இடபமே.

265. வேல் கெழு தட கை சால் பெரு செல்வ - வேல்பொருந்தின பெருமையையுடைய கையானமைந்த பெரிய செல்வ.

என்றது, வேல் வெற்றியாற்பெற்ற அச்செல்வத்தை.

266 - 7. [ குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து, விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ :]

குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து கிழவ -4குருகாற் பெயர் பெற்ற மலையைப் பிளந்த குறையாத வெற்றியையுடைய கிழவ,

விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ - தேவருலகைத் தீண்டும் நெடியவரைகளையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரிமையுடையாய்,

அதற்கு உரியனாதல், "சேயோன் மேய மைவரை யுலகமும்" (தொல். அகத்திணை. சூ. 5) என்பதனாலுணர்க.

268. பலர் புகழ் நல் மொழி புலவர் ஏறே - பலரும் புகழ்ந்து சொல்லும் நன்றாகிய சொற்களையுடைய பரசமயத்தினுள்ளார்க்கு ஏற்றின் தன்மையை உடையவனே,

என்றது : கல்வி மதத்தையுடைய யானை போல்வார்க்குச் சிங்கவேறு போல்வாயென்றதாம்.

269. [ அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக :] பெறல் அரு மரபின் பெரும்பெயர் முருக - பிறர்க்குப் பெறலரிய முறைமையினையுடைய பெரும்பொருளையுடைய முருக,


1. வீரராயிருப்பார்க்கு வீரராயிருப்பவனே (வேறுரை)

2. "வேதியர் வெறுச்கையும்" (திருவகுப்பு, வேளைக்காரன்.)

3. "சொன்மலை யல்லன தொடுகட லமிர்தம்" (கம்ப. நாட்டுப். 47)

4. குருகு - கிரவுஞ்சமென்னும் பறவை ; அதனாற் பெயர்பெற்ற மலை கிரவுஞ்சமலை.