79

1 - திருமுருகாற்றுப்படை

தலும் (249) உரியன் (189); நகரிலே (244) பாடி (245) வைத்து இயக்கி (246) வாழ்த்தி (247) வழிபட (248) உறைதலுமுரியன் (189); இஃது யானறிந்தபடியே கூறினேன் (249); இனி ஆண்டாண்டாயினுமாக, பிறவிடங்களிலே யாயினுமாக (250), முந்துநீகண்டுழிமுகனமர்ந்து முன்னர் எதிர்முகமாக்கி ஏத்திப் (251) பரவி வணங்கிப் (252) பின்னர் அண்மையாக விளித்து யானறியளவையினேத்தி (277) நின்னடி யுள்ளி வந்தேனென்று (279) நீ குறித்தது மொழிவதற்குமுன்னே (281) கூளியர் (282) குறித்துத் (283) தோன்றிப் (288) பெரும (285) இரவலன் நீ அளிக்கத்தக்கான் (284) வந்தோனென்று கூற (285) மலைகிழவோனாகிய (317) குரிசிலும் (276) தான்வந்தெய்தித் (283) தழீஇக் (289) காட்டி (290) அஞ்சலோம்புமதியென்று (291) அன்புடை நன்மொழி யளைஇ (292) ஒரு நீயாகித் தோன்றும்படி (294) பெறலரும்பரிசில் நல்குவ (295) னென வீடுபெறக் கருதிய இரவலனை நோக்கி வீடுபெற்றானொருவன் ஆற்றுப்படுத்ததாக வினைமுடிக்க.

இது புறத்திணையியலுள், "தாவினல்லிசை" (தொல். புறத். சூ. 36) என்னுஞ் சூத்திரத்துள், "ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச், சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்" என்பதனால் கந்தழியைப் பெற்றானொருவன் அதனைப்பெறாதானொருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை வழிப்படுத்துக் கூறுவானென்பது பற்றிச் செய்யுள் செய்தாராயிற்று.

கந்தழியாவது ஒருபற்றுமற்று அருவாய்த் தானேநிற்கும் தத்துவங்கடந்த பொருள் ; அது, 1 "சார்பினாற்றோன்றாது தானருவாய் ........ மைதீர் சுடர்" என்பதாம்; இதனை, "உற்ற வாக்கையி னுறுபொரு ணறுமல ரெழுதரு நாற்றம்போற், பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்" (திருவா. அதிசயப்பத்து, 9) என அதனை உணர்ந்தோர்கூறியவாற்றானுணர்க.

முருகாற்றுப்படையென்றதற்கு வீடுபெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடுபெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்ததென்று பொருள் கூறுக.

குமரவேளை மதுரைக் கணக்காயனார்மகனார் நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப்படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்து வாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.


1. "சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்கும், சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ, வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த, தூய்மையதா மைதீர் சுடர்" (தொல். புறத்திணை. சூ. 33, ந. மேற்.)