மூலமும் உரையும்
கடவுள் வாழ்த்து
திணை : பாடாண்
துறை : கடவுள் வாழ்த்து
(துறைவிளக்கம்) என்றது, இந்நூல் என்றும் நின்று நிலவ வேண்டிக் கடவுளை வாழ்த்துவான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், மாயோனே வேதமுதல்வனென ஆன்றோர் கூறுவராதலின், யாமும் அவனையே வணங்குவோமென்று வாழ்த்துக் கூறாநிற்பது.
(இலக்கண விளக்கம்)
| “பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே |
| நாடுங் காலை நாலிரண் டுடைத்தே” (தொல். பாடாண் 80) |
என்புழிப் பெறப்பட்ட கடவுள் வாழ்த்து வகை முதலிய எட்டு வகையினுள் இது கடவுள் வாழ்த்து என்னும் வகையினுள் அடங்கும்.
“வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே” என்னும் விதிபற்றி ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூற்கு ஆசிரியப் பாவாற் கடவுள் வாழ்த்துக் கூறுவாராயினர் என்க. இஃது உலகிற்குப் பயன்பட இறைவனைப்படர்க்கையில் வைத்து வாழ்த்தியபடியாம்.
நேரிசையாசிரியப்பா
| மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் |
| வளைநரல் பௌவம் உடுக்கை யாக |
| விசும்புமெய் யாகத் திசைகை யாகப் |
| பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக |
5 | இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய |
| வேத முதல்வன் 1 என்ப |
| தீதற விளங்கிய திகிரி யோனே |