பக்கம் எண் :


2


பாரதம் பாடிய பெருந்தேவனார்

    (சொற்பொருள்) மா நிலம் சேவடி ஆக - பெரிய நிலம் தன் சிவந்த அடிகளாகவும்; தூ நீர் வளைநரல் பௌவம் உடுக்கை ஆக - தூய நீரையுடைய சங்குகள் ஒலிக்கின்ற கடல் ஆடையாகவும்; விசும்பு மெய் ஆக - ஆகாயம் மெய்யாகவும்; திசை கை ஆக-திசை கைகளாகவும்; பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ஆக-தண்ணிய கதிர்களையுடைய திங்களும் ஞாயிறுமாகிய இரண்டும் இரண்டு கண்களாகவுங் கொண்டு; இயன்ற - அமைந்துடைய எல்லாவுயிர்களிடத்தும் தான் பொருந்தி யிருப்பதன்றி; எல்லாம் பயின்று அகத்து அடக்கிய வேத முதல்வன் - நில முதலாய எல்லாப் பொருள்களையும் தன்னுறுப்பகத் தடக்கிய வேதத்தாற் கூறப்படும் முதற்கடவுள்; தீது அற விளங்கிய திகிரியோன் என்ப-குற்றந்தீர விளங்கிய திகிரியையுடைய மாயோனே யென்று ஆன்றோர் கூறாநிற்பர்; ஆதலின் யாமும் அவனையே கடவுளாகக் கொண்டு வணங்குவோ மென்றவாறு.

    (விளக்கம்) மா-பெருமை. தூ நீர் - அலையாலே தூவப்படுநீரெனவுமாம். வளை-சங்கு. நரலுதல்-ஒலித்தல். பௌவம்-கடல். திகிரி-சக்கராயுதம்.

    இதனுள் ஐம்பெரும் பூதமும் மதியமும் ஞாயிறும் திசையும் துறக்கமுமாய் அமைந்த மூவுலகமும் திருமாலினொருவடிவமேயெனவும், அவன் அவ்வடிவாக விளங்குதலால் உலகமும் உலகத்துயிர்களும் அவ்வுயிர்களாலே துய்க்கப்படும் பொருளும் அவனேயெனவும், அவனியல்பை உள்ளத்தாலுணரவல்லாரே ஆன்றோரெனவும், அவரே உயிர்களின்மாட்டுப் பேரருளுடைமையான் விரித்துக் கூறுவாரெனவும், பெரிதும் பயனெய்துமாறு கூறினாராயிற்று. ஏனைப் பூதமும் பிறவுங் கூறிய அடிகள் சிதைவுற்றமையின், வடமொழிச் செய்யுளை நோக்கிக் கூறலாயிற்று.

    உயிர்ப்பன்மை மெய்யாற் செய்யப்படும் வணக்கம் திருவடியிடத்ததாதலின் அதனை முற்கூறினார். மனத்தாலே கருதற்குரியானன்றிக் காண்டற்கரியனென்பார் விசும்பு மெய்யென்றார், இனி நியாய நூலார் "விசும்பு நீலநிறமுடையது" என்றலின், இறைவனது நீலமேனியை நோக்கி விசும்பு மெய்யாக என்றாரெனலுமாம். உயிர்களின் நல்வினை தீவினை யறிந்து அவற்றிற்கேற்ப உதவுதற் பொருட்டு யாண்டுஞ் சான்றாகி யுறைதலால் எல்லாம் பயின்றாரென்றார்; எனவே இறைவனது உள்ளுறையாயிருக்குந் தன்மை (அந்தர்யாமித்துவங்) கூறியதாயிற்று. ஊழி திரியுங்காலத்து எல்லாம் அழியாது அளித்தற் சிறப்புக் கூறுவார் அகத்தடக்கியென அவனுறுப்பகத்தடக்கினமை கூறினார். இறைவனது பரத்துவங் கூறுவார் வேதமுதல்வனென்றார். இங்ஙனம் கூறியவாற்றால் அவ்வுருவைத் தியானம் செய்கவென்றதாயிற்று. மண் விண் பாதலம் என்ற மூன்றுலத்துக்கும் அவுணராலே செய்யப்படுகின்ற தீங்குகளைப் போக்கி விளங்குவதாலே, தீதற விளங்கிய திகிரியுடையோனென்றார்.