| உறுகதிர் இளவெயில் உண்ணும் நாடன் |
| நின்மார்பு அணங்கிய செல்லல் அருநோய் |
| யார்க்குநொந்து உரைக்கோ யானே பன்னாள் |
10 | காமர் நனிசொல் சொல்லி |
| ஏமமென்று அருளாய் நீமயங் கினையே. |
(சொ - ள்.) பெய்து போகு எழிலி வைகு மலை சேர - மழையைப் பெய்தொழிந்து செல்லும் மேகமெல்லாம் தாம் முன்ப தங்கியிருந்த மலையின்கண்ணே சென்று தங்காநிற்ப; தேன்தூங்கு உயர்வரை அருவி ஆர்ப்ப - தேனிறால் தூங்குகின்ற உயர்ந்த வெற்பினின்று அருவி ஆரவாரித்து வீழாநிற்ப; வேங்கை தந்த வெற்பு அணி நல்நாள் பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ - வேங்கைமரங்கள் மலர்ந்த அழகிய மலையில் நல்ல நாட்காலைப் பொழுதிலே பொன்போன்ற பூக்களையுடைய கிளையிலிருந்து அளாவி; கமழ் தாது ஆடிய கவின்பெறு தோகை - நறுமணம் வீசும் மகரந்தத்தில் அளைந்த அழகு பெற்ற மயில்; பாசு அறை மீமிசைக் கணம் கொள்பு - பசிய கற்பாறையி னுச்சிமீது தன் கூட்டத்தோடு கூடி; ஞாயிற்று உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன் - ஆதித்தனது மிக்க கதிரையுடைய இளவெயிலைத் துய்க்கின்ற மலைநாடனே!; நின் மார்பு அணங்கிய செல்லல் அருநோய் யான் யார்க்கு நொந்து உரைக்கோ - நினது மார்பினால் வருத்தப் பெற்ற இன்னாமை நீங்குதற்கரிய காமநோயை யான் யாரிடத்து நொந்து கூறாநிற்பேன்?; பல் நாள் நனி சொல் காமர் சொல்லி ஏமம் என்று அருளாய் - நீ வந்து புணரும் பல நாளும் மிக இனிய வார்த்தைகளை யான் விரும்பும்படி சொல்லி இங்ஙனம் கூறியவழி நடத்தல் இவட்குக் காப்புடைத்தாகுமென்று அருளாயாய்; நீ மயங்கினை - நீ மயக்கமுறாநின்றனை; இதனை யான் யார்க்கு நொந்து கூறாநிற்பேன்; எ - று.
(வி - ம்.) வேங்கை தந்த பூஞ்சினை யெனக் கூட்டுக.
நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேனென்றா னாதலின், நனிசொற்சொல்லினை யென்றாள். பிரியின் இறந்துபடுமென்று கருதி வரைந்தாய் அல்லையென்பாள் அருளா யென்றாள்.
உள்ளுறை:- மயில் வேங்கை மலரின் தாதில் அளைந்து தன் கூட்டத்தொடு சேர்ந்து ஞாயிற்றின் இளவெயில் உண்ணுமென்றது, நீ தானும் இவளை மணந்து இன்பம் நுகர்ந்து நின் சுற்றத்தொடு கெழுமி இல்லறம் நிகழ்த்தற்பாலை யென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவுகடாதல்.
(பெரு - ரை.) யான் நினக்குப் பன்னாள் காமர் நனிசொல் சொல்லியும் நீ மயங்கினை ஏமம் என்று அருளாய் என்றியைத்தல் நன்று.
(396)