பக்கம் எண் :


8


     
ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்  
     
பொரியரை வேம்பின் புள்ளி நீழல் 
     
கட்டளை அன்ன வட்டரங் கிழைத்துக் 
     
கல்லாச் சிறா அர் நெல்லிவட் டாடும் 
5
வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர் 
     
சுரன் முதல் வந்த உரன்மாய் மாலை 
     
யுள்ளினென் அல்லனோ யானே யுள்ளிய 
     
வினைமுடித் தன்ன இனியோண் 
     
மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே. 

     (சொ - ள்.) ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினை நெஞ்சே! பார்ப்பை யீன்ற பருந்து வருந்தியுறையா நிற்கும் ஆகாயத்தின்மேற் செல்லுகின்ற நெடிய கிளைகளையும்; பொரிஅரை வேம்பின் புள்ளி நீழல்-பொரிந்த அடியையுமுடைய வேம்பினது புள்ளிபோன்ற நிழலின்கண்ணே; கட்டளை அன்னவட்டு அரங்கு இழைத்து - கட்டளைக் கற்போன்ற அரங்கை வட்டினாலே கீறி; கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்-ஏனைத் தொழிலொன்றும் கற்றறியாத சிறுவர்கள், நெல்லியங்காயை வட்டாகக்கொண்டு பாண்டிலாடா நிற்கும்; வில் ஏர் உழவர் வெம்முனைச் சீறூர் - விற்போரால் ஆறலைத்துண்ணும் மழவரின் வெய்ய குடியிருப்பினையுடைய சீறூரையுடைய; சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை - அழற் சுரத்தின் கண்ணே முற்பட்டு வந்த நம் வலியனைத்தையும் குறைக்கின்ற மாலைப் பொழுதைக் கண்டு; உள்ளிய வினைமுடித்து அன்ன இனியோள் - இம் மாலையானது கருதிய வினை முடித்தாற் போன்ற இனிமையையுடைய நம் காதலி; மனைமாண் சுடரொடு படர் பொழுது என-மனையகத்து மாட்சிமைப்பட்ட விளக்கை ஏற்றி அதன் முன்னின்று அவர் தாம் இன்னும் வந்தாரில்லையே யென்று அவ்விளக்கொடு வெறுத்துத் துன்புற்றுக் கருதுகின்ற பொழுதாகும் என்று; யான் உள்ளினன் அல்லனோ-யான் முன்னம் ஒரு காலத்து நினைத்தேன் அல்லனோ? அங்ஙனமாக இப்பொழுதும் பொருளீட்டுமாறு ஒருப்படுத்தி என்னை வருத்தாதேகொள்; இனி யான் வாரேன் காண்; எ-று.

     (வி - ம்.)உயவு-வருத்தம். கட்டளை - பொன்னுரைக்குங் கல். சுரன்முதல்-சுரத்தினிடத்தில்; முதல்: ஏழனுருபு, படர்தல்-நினைத்தல்.

     வெப்பத்தால் இலைதழைக்காது கருகுதலிற் புள்ளி போன்ற நிழலாயிற்று. ஏரால் உழுதுண்பார் போல வில்லால் ஆறலைத்துண்ணலின் வில்லேர் உழவ ரென்றார். வேம்பின் நீழற் சிறார் வட்டாடுஞ் சீறூரென்க. முன்பு பொருள் செயல் வினையை முடித்துப் பெற்ற மகிழ்ச்சியனாதலின் வினைமுடித்தன்ன வினியோளென்றான். இதனானே அம் மகிழ்ச்சி