குறுந்தொகை
மூலமும் உரையும்
கடவுள் வாழ்த்து
| தாமரை புரையுங் காமர் சேவடிப் |
| பவழத் தன்ன மேனித் திகழொளிக் |
| குன்றி யேய்க்கு முடுக்கைக் குன்றின் |
5 | நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேற் |
| சேவலங் கொடியோன் காப்ப |
| ஏம வைக லெய்தின்றா லுலகே. |
என்பது கடவுள் வாழ்த்து.
பாரதம் பாடிய பெருந்தேவனார்.
(பிரதி பேதம்) 4. ‘வெஞ்சுடர்’, ‘செஞ்சுடர்’ 6. ‘ஏமம் வைகல்’
(பதவுரை) தாமரை புரையும் காமர் சேவடி -தாமரை மலரைப் போன்ற அழகிய செம்மையாகிய திருவடியையும், பவழத்து அன்ன மேனி - பவழத்தை ஒத்தசிவந்த நிறத்தை யும், திகழ் ஒளி - விளங்கா நின்ற ஒளியையும், குன்றி ஏய்க்கும் உடுக்கை - குன்றிமணியை ஒக்கும் சிவந்த ஆடை யையும், குன்றின் நெஞ்சுபக எறிந்த அம் சுடர் நெடு வேல் - கிரவுஞ்ச மலையினது நடுவிடம் பிளக்கும்படி வீசிய அழகிய ஒளியை உடைய நெடிய வேற் படையையும், சேவல் அம் கொடியோன் - கோழிச் சேவலை வரைந்த கொடியையு முடைய முருகக் கடவுள், காப்ப - பாதுகாத்து அருளுவதால், உலகு ஏமம் வைகல் எய்தின்று - உலகத்தில் உள்ள உயிர்கள் இன்ப மயமாகிய நாட்களை அடையா நின்றன; ஆதலின் உலகிற்கு இடையூறு இல்லை என்றவாறு.