மின்காட்டுங் கொடிமருங்கு லுமையாட் கென்றும் விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை யோன்காண் நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண் பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு தென்காட்டுஞ் செழும்புறவிற் றிருப்புத் தூரில் திருத்தளியான் காணவனென் சிந்தை யானே (திருநாவுக்கரசர் தேவாரம்) கடைச்சங்க காலத்து நூல்களில் இப்பொழுது கிடைக்கும் இலக்கியங்கள் பாட்டு, தொகை, கீழ்க்கணக்கென மூன்று வகைப்படும். பாட்டென்பது திருமுருகாற்றுப் படை முதல் மலைபடுகடாம் இறுதியாக உள்ள பத்துப்பாட்டும், தொகையென்பது பல செய்யுட்களைத் தொகுத்தமைத்தன வாகிய நற்றிணை முதற் புறநானூறு இறுதியாக உள்ள எட்டு நூல்களும், கீழ்க்கணக்கு என்பது நாலடியார் முதல் கைந்நிலை இறுதியாகவுள்ள பதினெட்டு நூல்களும் ஆகும். இவற்றுள், தமிழின் பொருள் வகைகளாகிய அகத்தையும் புறத்தையும் பற்றிய இலக்கணங்களுக்கு ஏனையவற்றினும் மிகச் சிறந்த இலக்கியங்களாக விளங்குவன எட்டுத் தொகை நூல்களேயாம். அவை நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பன; பதிற்றுப்பத்தும் புறநானூறும் புறப்பொருள் பற்றியும், கலித்தொகையும் பரிபாடலும் யாப்புப் பற்றியும் தொகுக்கப்பட்டன. ஐங்குறுநூறு அகனைந்திணையுள் ஒவ்வொன்றுக்கும் நூறு நூறு செய்யுட்கள் அமைய ஓரம்போகியார் முதலிய ஐந்து நல்லிசைப் புலவர்களால் பாடப்பெற்றது. ஏனைய மூன்றும் அகப்பொருள் பற்றிப் பல புலவர்கள் பாடிய செய்யுட்கள் அடியளவு
|