நோக்கித் தொகுக்கப்பட்டன. குறுந்தொகை நாலடிச் சிற்றெல்லையையும் எட்டடிப் பேரெல்லையையும் உடைய அகவற் பாக்களையும், நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையையும் பன்னிரண்டடிப் பேரெல்லையையும் உடைய பாக்களையும், அகநானூறு பதின்மூன்றடிச் சிற்றெல்லையையும் முப்பத்தோரடிப் பேரெல்லையையும் உடைய செய்யுட்களையும் கொண்டன. இவை மூன்றும் இவ்வடியளவையன்றிப் பிற திறங்களில் ஓரினமாவன. இவ்வமைப்பை நோக்குகையில் பல புலவர்கள் தனித் தனியே இயற்றிய அகப் பொருட் செய்யுட்களைத் தொகுத்து அவற்றை அடியளவால் வகைப்படுத்திய பின் அவற்றைத் தொகுத்தவர்கள் ஒவ்வொன்றிலும் நானூறு பாக்கள் இருக்கும்படி தம் காலத்துப் புலவர்கள் இயற்றியவற்றையும் சேர்த்து அமைத்தார்கள் என்று கருத இடமுண்டாகின்றது.