குறுந்தொகை


x


    பண்டைக் காலத்தில் மக்கள் மனனப் பயிற்சி மிகவுடையவராக இருந்ததனால் இவ்வளவு செய்யுட்களையும் அவற்றை இயற்றிய ஆசிரியர் பெயர்களையும் நினைவில் னவத்திருந்தனர். அவை அங்கங்கே பலரால் சொல்லப்பட்டு வழங்கி வந்தன. சில செய்யுட்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அதனால் அவ்வச் செய்யுட்களிற் காணப்படும் அரிய சொற்றொடராலேயே அப்புலவர் பெயரைக் குறித்துக் கொண்டனர். சிறுபான்மை ஆசிரியர் இயற்பெயர் தெரிந்தும் அவர் பெயரை அமைக்காமல் சிறப்புப் பெயரையே அமைத்தனர்.


குறுந்தொகை

    இங்ஙனம் அமைந்துள்ள புலவர் பெயர்களைக் கொண்டு ஆராய்ந்தால் எட்டுத்தொகையில் முதலில் தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை என்பது தெரிய வரும். காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பது ஒரு புலவர் பெயர். அவருடைய இயற்பெயர் நச்செள்ளையார் என்பது. விருந்துவரக் கரைந்த காக்கையைப் பாராட்டினமையின் காக்கைபாடினியார் என்ற சிறப்புப்பெயர் அவருக்கு உளதாயிற்று. குறுந்தொகையை முதலில் தொகுக்கையில் நச்செள்ளையார,் என்பவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார் எனக் குறிக்கப்பட்டார். அப்பால் தொகுக்கப்பட்ட நூல்களில் அவ்வாறே வழங்கப்பட்டார். கயமனார் என்பது ஒரு புலவரின் பெயர். அப்பெயரை அவரது சிறப்புப் பெயராகவே கருத இடம் உண்டு; அவரது இயற்பெயர் தெரியவில்லை, குறுந்தொகையில், கழியில் உள்ள நெய்தல் மலருக்குக் கயத்தில் மூழ்கும் மகளிர் கண்ணை அவர் உவமிக்கின்றனர். கயத்தில் நிகழும் நிகழ்ச்சியைக் கூறுதலின் அப்பெயர் பெற்றார் என்று கொள்ளல் தகும். அவர் இயற்றிய பாடல்கள் பிற தொகை நூல்களிலும் காணப்படுகின்றன. அவ்விடங்களிலும் கயமனார் என்ற சிறப்புப் பெயரே குறிக்கப் பெற்றிருக்கிறது. அவருடைய இயற்பெயர் தெரிந்த காலத்தும் குறுந்தொகையில் அமைத்த பெயரையே பின் தொகுத்த நூல்களிலும் அமைத்தனர் என்றே தெரிய வருகின்றது. இங்ஙனமே கள்ளிலாத்திரையனார் என்பவரது பெயருக்குரிய காரணம் குறுந்தொகையிலுள்ள செய்யுட் பகுதியாகிய, “கள்ளிற் கேளி ராத்திரை” என்பது. அவர் செய்யுட்கள் புறநானூற்றிலும் வருகின்றன. ஓரேருழவர் என்னும் புலவர் இயற்றிய குறுந்தொகைப் பாட்டில் உள்ள, “ஓரேருழவன் போல’’ என்னும் தொடர் அவரது பெயர்க் காரணத்தைக் குறிப்பிக்கின்றது. புறநானூற்றிலும் அவர் செய்யுள் ஒன்று காணப்படுகின்றது. இவ்விரு புலவர்களும் குறுந்தொகைச் செய்யுட் பகுதி காரணமாகப் பெற்ற பெயராலேயே பின் தொகுத்த புறநானூற்றிலும் குறிக்கப்பட்டனரென்றல் ஏற்புடையதே யன்றோ?