குறுந்தொகை


xii


  
அடியளவு

    இந்நூற் செய்யுட்கள் நான்கடிச் சிற்றெல்லையும் எட்டடிப் பேரெல்லையும் உடையனவென்று மேற்காட்டிய குறிப்பு அறிவிப்பினும் 307, 391-ஆம் செய்யுட்கள் ஒன்பதடியை உடையனவாகக் காணப்படுகின்றன. இவ்விரண்டினுள்ளும் 391-ஆம் செய்யுள் சில பிரதிகளில் எட்டடியை உடையதாகச் சில பாட பேதங்களுடன் எழுதப்பட்டுள்ளது. அதனை எட்டடிச் செய்யுளாகவே கொள்ளினும் மற்றொன்றாகிய 307-ஆம் செய்யுள் ஒன்பதடிகளை உடையதாகவே எல்லாப் பிரதிகளிலும் இருக்கின்றது. அடியளவின்படி தொகுத்த குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்பவற்றுள் பின் இரண்டும் கடவுள் வாழ்த்தொழிய நானூறு செய்யுட்களையே உடையன. அவ்வினத்திற் சேர்ந்த குறுந்தொகையும் 400 செய்யுட்கள் உடையதாகவே கோடல் பொருத்தமாகும். 9 அடிகளை உடைய 307-ஆம் செய்யுளைக் குறுந்தொகையில் சேராதது என்று விலக்கின் இந்நூல் மேலே குறித்த வரையறைக்குள் அடங்கிய 400 செய்யுட்களை உடையதாகின்றது.

  

பழைய கருத்து

    இவற்றிற்குரிய பழைய கருத்துக்கள் தொகுத்தவராலேனும் பிற்காலத்தாராலேனும் அமைக்கப் பட்டிருத்தல் வேண்டும். ஒரு செய்யுளுக்கே சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. பிற்காலத்தில் உரை ஆசிரியர்கள் இச் செய்யுட்களை மேற்கோளாகக் காட்டும் இடங்களில் சிலவற்றிற்குப் பழைய கருத்தைக் கூறாமல் வேறு கருத்தை அமைக்கின்றனர். தொகை நூல்களுள் ஒன்றாகிய புறநானூற்றுக்கு அமைக்கப் பெற்ற துறைகள் இங்ஙனமே பிற்காலத்தாராற் சேர்க்கப் பெற்றன என்பதை,


  
‘‘தத்தம் புதுநூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறைகூறி  
  
 னாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு  
  
 நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறைகூற வேண்டு  
  
 மென்றறிக’‘        (தொல். புறத்.35, உரை)  

என்னும் நச்சினார்க்கினியர் எழுத்து வெளியிடுகின்றது.

     முன்பு நிகழ்ந்த சில வரலாறுகளோடு தொடர்புடைய பாட்டுக்களும் இக்குறுந்தொகையிற் சேர்க்கப் பெற்றுத் துறை வகுக்கப்பட்டுள்ளன. இறையனார் தருமியின் பொருட்டு எழுதி அளித்த ‘கொங்குதேர் வாழ்க்கை” (8) என்னும் செய்யுளும், வெள்ளிவீதியார் தம் காதலனைப் பிரிந்த காலத்தில் பாடியனவாகிய, ‘கன்று முண்ணாது” (83), ‘நிலந்தொட்டுப் புகாஅர்” (331) என்பனவும், காதலனை இழந்த ஆதிமந்தியார் பாடிய