குறுந்தொகை


xiv


  
பழைய உரை
  
“நல்லறி வுடைய தொல்பே ராசான்  
  
 கல்வியுங் காட்சியுங் காசினி யறியப்  
  
 பொருடெரி குறுந்தொகை யிருபது பாட்டிற்  
  
 கிதுபொரு ளென்றவ னெழுதா தொழிய  
  
 இதுபொரு ளென்றதற் கேற்ப வுரைத்தும்”  

என்பது நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரச் செய்யுளொன்றன் பகுதி. இதன்கண், பேராசிரியர் தம்முடைய கல்வித் திறனும் அறிவுவன்மையும் உலகினர் அறியும்படி குறுந்தொகைக்குப் பொருள் எழுதினார் என்பதும், இருபது செய்யுட்களுக்கு மட்டும் எழுதவில்லை என்பதும், அவ்விருபது செய்யுட்களுக்கும் நச்சினார்க்கினியர் உரையிட்டனர் என்பதும் கூறப்படுகின்றன. நச்சினார்க்கினியர் உரை வகுத்த நூல்களைத் தொகுத்துரைக்கும் செய்யுளாகிய,

  
“பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும்  
  
 ஆரக் குறுந்தொகையு ளைஞ்ஞான்கும்-சாரத்  
  
 திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்  
  
 விருத்திநச்சி னார்க்கினிய மே”  

என்பதிலும் நச்சினார்க்கினியர் “குறுந்தொகையுள் ஐஞ்ஞான்” கிற்கு உரைகண்ட செய்தி காணப்படுகின்றது.

        தொல்காப்பியம் அகத்திணையியலில்,

 
  
“உள்ளுறை யுவம மேனை யுவமமெனத்  
  
 தள்ளா தாகுந் திணையுணர் வகையே”     (46) 

என்னும் சூத்திரத்தின் உரையில் நச்சினார்க்கினியர் ஏனையுவமம் வந்த செய்யுளுக்கு இந்நூலில் உள்ள “யானே யீண்டை யேனே” (54) என்பதைக் காட்டி,

  
‘‘பேராசிரியரும் இப்பாட்டில் மீனெறிதூண்டி லென்றதனை  
  
 ஏனையுவம மென்றார்’‘  

என எழுதியுள்ளார். இதனால் பேராசிரியர் குறுந்தொகைக்கு உரை எழுதியிருந்ததை வலியுறுத்துகின்றது; அவர் அங்கங்கே இலக்கணக் குறிப்புக்கள் எழுதியிருக்க வேண்டும் என்பதும் பெறப்படுகின்றது. அவர் உரை எழுதாது விடுத்த இருபது செய்யுட்கள் பின் இருபது செய்யுட்களாக இருத்தல் கூடும்; இடையிடையே பொருள் தோற்றாமல் விட்ட செய்யுட்கள் எனக் கொள்ளுதல், ‘நல்லறிவுடைய தொல்பேராசா’னாகிய அவரது பெருமைக்கு இழுக்காகும். அவர் தம் முதுமையில் குறுந்தொகைக்கு உரை எழுதத் தொடங்கி 380 செய்யுட்களுக்கு எழுதி முடித்த பின்னர்