நோய்வாய்ப் பட்டதாலோ, பிற காரணத்தாலோ மேல் எழுத இயலாத நிலையை அடைந்தனரென்றே கொள்ளுதல் ஏற்புடைத்தாகும். பிற்காலத்தில் நச்சினார்க்கினியர் அவ்வரிய உரையைப் பின்பற்றி அதற்கேற்ப எஞ்சிய செய்யுட்களுக்கு உரை எழுதியிருத்தல் கூடும்.
இங்ஙனம் மிகச் சிறந்த இரண்டு உரையாசிரியர்களாலும் எழுதப்பட்ட பழைய உரை இப்பொழுது கிடைக்கவில்லை. இது தமிழர்களுக்கு நேர்ந்த ஒரு பெரிய நஷ்டமே ஆகும்.
ஆராய்ந்த முறை
சீவக சிந்தாமணியை நான் முதன்முறை பதிப்பிக்கும் பொருட்டு ஆராய்ந்து வருகையில் அந்நூல் உரையில் மேற்கோளாக வந்துள்ள செய்யுட்களும் செய்யுட் பகுதிகளும் இன்ன இன்ன நூல்களைச் சார்ந்தவை என்று முதலில் எனக்கு விளங்கவில்லை. பத்துப் பாட்டு இன்னவை, எட்டுத் தொகை இன்னவை என்று விளக்கமாக அறிந்து கொள்ள முடியாத காலம் அது. சீவக சிந்தாமணியில் உள்ள மேற்கோள்களுக்குரிய ஆகரங்கள் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்து அப்பதிப்பில் அமைத்தேன். அக்காலத்தில் நான் படித்து அறிந்த நூல்களுள் இக்குறுந்தொகையும் ஒன்று.
திருவாவடுதுறைப் புத்தகசாலையில் இருந்து எட்டுத் தொகையில் கலித்தொகை, பரிபாடல் என்னும் இரண்டொழிய ஏனைய ஆறு நூல்களும் எழுதப் பெற்ற ஏடொன்று கிடைத்தது. அக்காலத்தில் அவற்றின் உட்பொருளை அறிந்து இன்புறுவார் அரியராக இருந்தனர். இடையே பல காலமாகச் சங்க நூல்களைப் படித்தலும் பாடம் சொல்லுதலும் அருகிப் போயினமையின் அந்நூல்களைப் பற்றிய உண்மையே தெரி்யாமல் இருந்தது. ஆதலின் அவ்வேட்டுச் சுவடியில் எழுதுவோர் பொருளறியாக் குறையால் நேர்ந்த பிழைகள் இருந்தன. அதனைப் பிரதி செய்விக்கையில் பிரதி செய்வோர்களால் நேர்ந்த பிழையால் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் செய்யப் பெற்றன. அப்பால் நான் ஏட்டுச் சுவடிகள் தேடிய இடங்களில் அடியில் காட்டியபடி வேறு ஒன்பது பிரதிகள் கிடைத்தன. அவற்றில் சில பூர்த்தியாக இருந்தன. சில குறையாக இருந்தன.
1. திருநெல்வேலி ஸ்ரீ அம்பலவாண கவிராயரவர்கள் ஏட்டுப் பிரதி.
2. மந்தித் தோப்பு மடத்தில் கிடைத்த ஏட்டுப் பிரதி.
3. செங்கோல் மடத்தில் கண்ட குறையான ஏட்டுப் பிரதி.