4. திருமயிலை வித்வான் ஸ்ரீ சண்முகம் பிள்ளையவர்கள் கடிதப் பிரதி.
5. சோடசாவதானம் ஸ்ரீ சுப்பராய செட்டியாரவர்கள் ஏட்டுப் பிரதி.
6. தொழுவூர் ஸ்ரீ வேலாயுத முதலியாரவர்கள் ஏட்டுப் பிரதி.
7. சென்னை இராசாங்கத்துக் கையெழுத்துப் புத்தகசாலை ஏட்டுப் பிரதி.
8. புதுக்கோட்டை ஸ்ரீ ராதாகிருஷ்ணையரவர்கள் கடிதப் பிரதி.
9. திருக்கோணமலை ஸ்ரீ தி.த.கனக சுந்தரம் பிள்ளையவர்கள் கடிதப் பிரதி.
இவற்றில் சிலவற்றைப் பார்த்துக் கொண்டு உரியவர்களிடம் கொடுத்து விட்டேன். இவற்றை அன்றிப் பிரயாணங்களில் கண்ட சில பிரதிகளோடு ஒப்பு நோக்கிப் பிரதிபேதங்கள் குறித்துக் கொண்டதும் உண்டு. மேலே குறித்த பிரதிகளுள் 4,9 என்னும் எண்ணுள்ள கடிதப் பிரதிகள் இரண்டையும் மீண்டும் ஒருமுறை பார்க்க விரும்பிய காலத்தில், அவற்றை வருவித்து வைத்திருந்த சென்னைச் சர்வகலா சாலைத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத் தலைவர் ஸ்ரீமான் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள், பி.ஏ., பி.எல்., அன்போடு உதவினார்கள். இப்பிரதிகள் யாவும் பெரும்பாலும் ஒரே மூலச் சுவடியின் பிரதிகளாகவே தோற்றின. எழுதுவோரால் நேர்ந்த பிழைகளும் மாற்றங்களும் ஒவ்வொன்றிலும் காணப்படுகின்றன. குறுந்தொகையின் பழைய உரை எங்கேனும் கிடைக்குமோ என்று அலைந்து தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அதன்மேல், கிடைத்தலரிதென்ற கருத்து உண்டாயினமையின் அம் முயற்சியை விட்டு விட்டேன்.
குறுந்தொகைப் பிரதிகளை ஒப்பு நோக்கிய பிறகு தொல்காப்பிய உரை முதலியவற்றைப் படித்து அங்கங்கே மேற்கோளாக ஆளப்பட்ட இந்நூற் செய்யுட்களையும் செய்யுட் பகுதிகளையும் தொகுத்து அவற்றில் கண்ட பாட பேதங்களையும் குறித்துக் கொண்டேன். இம் முயற்சியால் பல அருமையான திருத்தங்கள் கிடைத்தன; பல ஐயங்கள் நீங்கின.
அப்பால் குறுந்தொகையின் மூலத்தில் காணப்படும் அரும்பதங்கள், சொற்றொடர்கள், உவமைகள், செய்திகள் முதலியவற்றிற்கு ஓரகராதியும் புலவர் பெயர்களுக்கு ஓரகராதியும் எழுதி வைத்துக் கொண்டேன். ஒரே புலவர் பாடிய செய்யுட்களைத் தொகை நூல்களில் படித்தறிந்த காலத்தில் அவற்றினுட் காணப்படும் ஒப்புமையாலும் சொல்லாட்சியாலும் இந்நூல் பகுதிகள் சில விளங்கின.