குறுந்தொகை


xvii


    இங்ஙனம் பல வகையான குறிப்புக்களும் அகராதிகளும் எழுதி வைத்துக் கொண்டு பொருள் வரையறை செய்யத் தொடங்கினேன். நாளடைவில் பெரும்பாலான செய்யுட்களின் பொருள்கள் விளங்கின; ‘இனி இதனை அச்சிட்டு வெளிப்படுத்தலாம்’ என எண்ணியிருந்தேன். இடையே, வாணியம்பாடி ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தி.சௌ. அரங்கசாமி ஐயங்கார் என்பவர் குறுந்தொகைக்கு உரை எழுதி 1915-ஆம் வருடம் பதிப்பித்து வெளியிட்டனர். அப்பால் குறுந்தொகை ஆராய்ச்சியில் எனக்கிருந்த ஊக்கம் சிறிது தளர்ந்தது. பிற நூல் ஆராய்ச்சியில் கருத்தைச் செலுத்தலானேன். பின்பும் சிலர் சில பத்திரிகைகளில் இந்நூலை வெளியிடுவதாகக் கேள்வியுற்றேன். 1933-ஆம் வருஷம் புரசவாக்கம் ஸர் எம்.ஸி. டி. ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக உள்ள ஸ்ரீமான் வித்வான் சோ. அருணாசல தேசிகரவர்கள் குறுந்தொகை மூலத்தை மட்டும் பதிப்பித்து வெளியிட்டார்கள். பழைய உரை இல்லாமையால் புதிய உரை எழுதி இந்நூலை நான் வெளியிட வேண்டுமென்ற கருத்து, சில தமிழ் அன்பர்களுக்கு இருந்ததை உணர்ந்தேன். பல அன்பர்கள் அடிக்கடி தூண்டி வந்தார்கள். முற்கூறிய ஐயங்கார் அவர்கள் உரைப்பிரதி இப்பொழுது எங்கும் கிடைக்கவில்லை. பல வருஷங்களாக உழைத்துத் தொகுத்த குறிப்புக்கள் வீணாகாமல் இருக்கும் பொருட்டு இந்நூலை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மீண்டும் உண்டாயிற்று. அதனால் இந்நூல் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வரலானேன். குறிப்புக்களும் ஒப்புமைப் பகுதிகளும் உரைப் பகுதிகளும் எழுதித் தொகுக்கப்பட்டன. அவ்வப்போது என்னோடு இருந்து பழகுபவர்கள் பலர் இந்த ஆராய்ச்சிக்கு உதவியாக இருந்தனர்.

    பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரை எழுதிய இந்நூலுக்கு உரை எழுதும் தகுதி என்பாற் சிறிதுமில்லை என்பதையும் என் முதுமையாலும் பலவேறு வகையான முட்டுப்பாடுகளாலும் எனக்கு உண்டாகி உள்ள தளர்ச்சியையும் நன்கு உணர்ந்திருப்பினும் இளமை தொடங்கி இவ்வுலகில்யாதினும் சிறந்ததாக எண்ணி வாழ்ந்து வருதற்குக் காரணமாகிய தமிழிடத்துள்ள அன்பும், எங்ஙனமேனும் இறைவன் இம் முயற்சியை நிறைவேற்றி அருளுவான் என்ற துணிவும் இப்பதிப்பில் என்னை ஈடுபடச் செய்தன.

  
சர்வகலாசாலையார் உதவி

    என் கருத்தை அன்பர்கள் சிலரால் அறிந்த ஸ்ரீமான் டி. சிவராம சேதுப்பிள்ளையவர்கள் 1934-ஆம் வருஷம், தாம் தலைவராக இருந்த தமிழ்ப்பாட புத்தகசபையின் மூலம் இப்பதிப்புக்குரிய